30 வருடங்களாக பா.ஜனதாவில் இருந்துவந்த தலைவர் காங்கிரசுக்கு செல்கிறார்…!

Read Time:4 Minute, 34 Second

30 வருடங்களாக பா.ஜனதாவில் இருந்துவந்த சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

பீகார் மாநிலத்தில் உள்ள பட்னா சாகிப் தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யாக இருப்பவர் சத்ருகன் சின்ஹா. தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தார். இதற்கிடையே அவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே திடீர் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷாவை பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்தார். கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

ஹோலி பண்டிகையின் போதும் பிரதமர் மோடி தன்னைத்தானே காவலாளி என கூறியதையும் விமர்சனம் செய்தார்.

அப்போது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடிக்கு(சார்ஜி) எனது ஹோலி வாழ்த்துக்கள். நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ‘நானும் காவலாளி’ எனும் முழக்கத்தை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் பேசிவரும் ‘காவலாளியே திருடிவிட்டார்’ என்ற கோஷத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தினால், ரஃபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் விடைதெரியாத பல கேள்விகளை மக்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருப்பதாக இருக்கும். அதற்கான பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி, தயாரிப்பும் இன்றி, திடீரென 25 லட்சம் காவலாளிகள் முன் நீங்கள் உரையாற்றினீர்கள். அதுஎப்படி எந்த கணக்கும் இன்றி 25 லட்சம் காவலாளிகள், ஏன் 21 லட்சம், 22 லட்சமாக இருக்கக் கூடாதா. வறுமையில் உழன்றுவரும் காவலாளிகளும், மக்களும் நிச்சயம் பிரதமரின் இந்த பேச்சை ரசித்திருக்கமாட்டார்கள். வறுமையின் பிடியில் இருக்கும் இந்த லட்சக்கணக்கான மக்களிடம் நீங்கள் உங்களின் அலங்கார சொல்லாடலைப் பயன்படுத்தி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, ஊதியத்தை அதிகரிக்கும் வழி, வறுமையை நீக்கும் வழி, சிறந்த ஊதியம் கிடைக்கும் வழி ஆகியவற்றைப் பற்றி பேசி இருக்கலாம் என குறிப்பிட்டார்.

காங்கிரசில் இணைகிறார்

கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. அவருடைய பட்னா சாகிப் தொகுதியில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார்.

‘‘சத்ருகன் சின்ஹா வியாழக்கிழமை டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். அவர் பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார்’’என கூறியுள்ளார் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங். பீகாரில் காங்கிரசுடன் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேரும்போதெல்லாம் பட்னா சாகிப் தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட்டுள்ளது. எனவே சின்ஹா காங்கிரஸ் வேட்பாளராகவே போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சின்ஹா மற்றும் ரவிசங்கர் பிரசாத் இடையே கடுமையான போட்டியிருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.