இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணையால் 1000 கிலோ மீட்டர் இலக்கையும் தாக்க முடியும் – டிஆர்டிஓ

Read Time:2 Minute, 33 Second

இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணையால் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்க முடியும் என டிஆர்டிஓ கூறியுள்ளார்.

பூமியின் கீழ் சுற்றுவட்ட பாதையில் செயற்கைகோளை ஏவுகணையின் மூலம் அளிக்கும் திட்டம் ‘மி‌ஷன் சக்தி’ திட்டம் ஆகும். எதிரி நாட்டு செயற்கைகோள் உளவு பார்க்க வந்தால் அதை சுட்டு வீழ்த்தும் வல்லமை இந்தியாவுக்கு ‘மி‌ஷன் சக்தி’ திட்டத்தின் பலனாக கிடைத்துள்ளது. சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.

புவியிலிருந்து 300 கிமீ தொலைவிலுள்ள செயற்கைக்கோள் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி பேசுகையில், ‘மிஷன் சக்தி’திட்டத்திற்கு கடந்த 6 மாதங்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு-பகலாக உழைத்தனர். ஏ-சாட் ஏவுகணை பிருத்வி வகை ஏவுகணைக்கு முற்றிலும் வேறுப்பட்டது. சோதனை முயற்சியின்போது 300 கி.மீ. தொலை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் அழிக்க முடியும். இந்தியா மிகவும் பொறுப்புணர்வு கொண்டது. எனவே, சோதனை தாக்குதலால் ஏற்படும் கழிவுகள் விரைவில் மறையும் விதமாக இலக்கு 300 கிலோ மீட்டருக்குள் நிர்ணயிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.