தேர்தலுக்கு இடையே 9.5 கோடி வாக்காளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி…!

Read Time:3 Minute, 44 Second

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 12.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்றது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 4.76 கோடி விவசாயிகளின் விவரங்கள் திரட்டப்பட்டன. மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் இந்தத் திட்டம் கடந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2.83 கோடி பேரின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

17-வது மக்களவைக்கான தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதலே இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து திட்டத்தை தொடர தேர்தல் ஆணையத்திடம் விவசாயத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மீதமுள்ள சுமார் 1.93 கோடி பயனாளிகளுக்கு வரும் 31-க்குள் ரூ.2 ஆயிரம் வழங்க அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 2-ம் தவணையை வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அடையாளம் காணப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி வழங்கலாம்” எனக்கூறியுள்ளது. இதுதொடர்பாக விவசாயத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் பேசுகையில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட விவசாயிகளின் தொலைப்பேசி எண்கள், ஆதார் எண்கள் மாநில அரசுக்களால் சேரிக்கப்பட்டுள்ளது. இப்படி 4,76 கோடி விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.

4.76 கோடி விவசாயிகள் அடையாளம்.

சுமார் 4.83 கோடி விவசாயிகளுக்கு தேர்தலுக்கு முன்பாகவே 2 தவணைகளாக ரூ.19 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. அதாவது ஒரு விவசாய குடும்பத்தில் 2 பேருக்கு வாக்குரிமை இருப்பதாக வைத்துக் கொண்டால், இந்த நிதியுதவியால் தேர்தல் நேரத்தில் சுமார் 9.5 கோடி வாக்காளர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 11 தேதி முதல் மே மாதம் 19 தேதி வரையில் தேர்தல் நடக்கிறது. மே மாதம் 23 தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் பேசுகையில், ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற நிதியுதவி வழங்குவது முறையானது கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.