பயங்கரவாதியை பாதுகாக்கும் சீனாவின் முகத்தில் கரியை பூசும் நடவடிக்கை தீவிரம்…

Read Time:3 Minute, 2 Second

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் சீனாவின் முகத்தில் கரியை பூசும் வகையில் அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பிரான்ஸ், மசூத் அசாருக்கு தடைவிதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தது. அதனையும் சீனா தடுத்தது.

சீனாவின் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதிகளும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சீனாவின் போக்கை அடுத்து மசூத் அசாருக்கு எதிராக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச நிதி நட வடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அப்போது‘‘தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது, அதற்கு ஆதரவு அளிப்போரை நீதியின் முன்பு நிறுத்த இந்தியாவுக்கு சர்வதேச சமுதாயம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டது.

இப்போது அவனை கருப்பு பட்டியலில் இணைக்க அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளுடன் கைக்கோர்க்கிறது.
ஆயுதத்தடை, பயண தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு சிக்கவைக்கும் வகையில் தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உதவியுடன் தயார் செய்து பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது எப்போது வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது தெரியவரவில்லை. 15 உறுப்பினர்களை கொண்ட கவுன்சிலில் 9 நாடுகளின் வாக்குகளை மட்டும் பெற்று தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கை வெற்றிப்பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக இடையூறை ஏற்படுத்தும் சீனாவின் முகத்தில் கரியை பூசுவதாக அமையும்.