‘மிஷன் சக்தி’ திட்டம் காங்கிரசின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி

Read Time:3 Minute, 24 Second

‘மிஷன் சக்தி’ திட்டம் விவகாரத்தில் காங்கிரசின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ‘மிஷன் சக்தி’ திட்டம் அறிவிப்பு தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு பதிலடியை கொடுத்தார். “பாதுகாப்பு படையின் கோரிக்கைகள் அனைத்தையும் காங்கிரஸ் புறக்கணித்துதான் வந்தது. மிஷன் சக்திக்கான முடிவு சில ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் திட்டத்தை முன்னெடுப்பதில் காலம் தாழ்த்தப்பட்டது. மிஷன் சக்தி திட்ட சோதனைக்கு விஞ்ஞானிகள் அனுமதியை கோரிய போது காங்கிரஸ் அரசு ஒத்திப்போட்டது. ஆனால் எங்களுடைய அரசு ஸ்திரமாக நடவடிக்கையை மேற்கொண்டது என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸை நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து அகற்றினாலே வறுமையை அகற்றிவிடலாம் என குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் மீண்டும் மோடி அரசுதான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரையில் வெற்று கோஷமிடும் ஏராளமான அரசுகளை பார்த்திருக்கிறார்கள்.

இப்போதுதான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்ட அரசை பார்க்கிறார்கள். உங்களுடைய இந்த காவலாளி அரசு, நிலமாக இருந்தாலும் சரி, ஆகாயமாக இருந்தாலும் சரி, விண்வெளியாக இருந்தாலும் சரி துணிச்சாலாக காவல்காத்து துல்லிய தாக்குதல் நடத்தும். பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை அழித்தோம். விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.

ஆனால் இந்த அரசு செய்கின்ற சாதனைகள் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறார்கள். எதிர்க்கட்சியினரை பாகிஸ்தான் மீடியாக்கள் கொண்டாடுகிறது. அவர்கள் பாகிஸ்தானின் ஹீரோவாகிவிட்டனர். எனவே உங்களுக்கு பாகிஸ்தானின் ஹீரோ வேண்டுமா? அல்லது இந்தியாவின் உண்மையான ஹீரோ வேண்டுமா? என்பதை முடிவு செய்யுங்கள் என கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த தேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முடிவை பா.ஜனதா எடுத்திருக்கிறது. முழுமையான அரசால்தான் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும். வானிலும், விண்வெளியிலும், நிலத்திலும் துணிச்சலாக எந்தவிதமான தாக்குதலையும் நிகழ்த்த முடியும் என கூறியுள்ளார்.