தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால் ரகுராம் ராஜன் நிதியமைச்சரா?

Read Time:3 Minute, 46 Second

தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால் ரகுராம் ராஜன் நிதியமைச்சரா என்ற கேள்விக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், ஐஎம்எப் பொருளாதார ஆலோசகருமான ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். புதுடெல்லியில் நடந்த ‘தி தேர்டு பில்லர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் செய்து கொண்டிருக்கும் பணியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய திறனை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அங்கும் நான் இருப்பேன்” என கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் ரகுராம் ராஜனை நிதியமைச்சராக்கப்படலாம் என யூகங்கள் எழுந்தது. இதற்கிடையே ராகுல் காந்தி பேசுகையில், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம் தொடர்பாக ரகுராம் ராஜனுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றார். இப்போது நிதியமைச்சர் தொடர்பான கேள்வியே அவரிடம் நேரடியாக எழுப்பப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜன் பதில் அளிக்கையில், நிதியமைச்சராக இந்தியாவிற்கு சேவை செய்வதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவிற்கு திரும்பவும் விருப்பம்தான். இதுதொடர்பாக எந்தஒரு கட்சியும் என்னிடம் பேசியது கிடையாது. யாரையும், எந்தகட்சியையும் நானும் சந்தித்தது கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் இத்தேர்தல் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. புதிய வித்தியாசமான சீர்திருத்தங்கள் அவசியமாகும்.

இந்த சிந்தனைகளையும், சீர்திருத்தங்களையும் புகுத்துவதற்கு தயாராக இருக்கிறேன், யாரேனும் அதை கேட்க விரும்பினால், அதை மிகவும் விளக்கமாக கூறுவதற்கும் தயாராக இருக்கிறேன். நிதியமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் குறுகிய கால சிக்கல்களைத் தீர்ப்பேன். ஏற்கனவே சீர்திருத்தம் தொடர்பாக பொருளாதார அறிஞர்கள் ஏராளமான பரிந்துரைகளை அளித்தோம். அதனை யாரும் படிக்கவில்லை. இப்போது அந்த திட்டங்களை கேட்கிறார்கள். ஏராளமான திட்டங்கள் முடங்கி கிடக்கிறது. அவைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன்.

கடன் வழங்குவது முறைப்படுத்தப்படும், வளர்ச்சிக்கான முக்கிய 3 சீர்திருத்தங்கள் செய்யப்படும். நாட்டில் வேளாண்துறையை மீண்டும் சீரமைப்பதற்கும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதற்கும் அதிகமான முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.