இந்தியா முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமா? பிரியங்கா காந்தி பதில்

Read Time:2 Minute, 15 Second

காங்கிரஸ் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, சமீபத்தில் தீவிர அரசியலில் இணைந்தார். அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரப்பணிகளை தொடங்கி உள்ளார். இதற்காக சமீபத்தில் கங்கை நதியில் 3 நாட்கள் படகு யாத்திரை மேற்கொண்டு கரையோர மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது கோவில்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக நான் முடிவு எடுக்கவில்லை. ஆனால் கட்சி கேட்டுக்கொண்டால் நான் போட்டியிடுவேன்,” எனக் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கும் எனக்கு தெரியவில்லை, கட்சி கேட்டால் என்னுடைய பிரசாரம் இந்தியா முழுவதும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என கூறிய பிரியங்கா, இது தேசத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். ராகுல் காந்தியின் வெற்றி, மக்களுக்கான வெற்றியாகும். காங்கிரஸ் கட்சியினர் அதற்காக பணியாற்ற வேண்டும் என்றார்.