பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை மல்லுக்கட்டும் அமெரிக்கா – சீனா…

Read Time:3 Minute, 53 Second

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் இந்தியா பலமுறை நடவடிக்கை எடுத்தது. 4 முறை மேற்கொண்ட முயற்சியை வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தடுத்துவிட்டது. இப்போது அமெரிக்கா சீனாவை ஓரங்கட்டும் வகையில் நடவடிக்கையொன்றை மேற்கொள்கிறது.

இதுவரையில் ஐ.நா.வின் 1267 பயங்கரவாத தடை கமிட்டியில் தீர்மானம் முடங்கியது. 1267 தடை கமிட்டியில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதை பயன்படுத்தியே சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. இப்போது அமெரிக்கா இம்முறையை விடுத்து நேரடியான முறையை கையில் எடுக்கிறது. 1267 தடை கமிட்டிக்கு பதிலாக பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாகவே தாக்கல் செய்துள்ளது.

மசூத் அசாருக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. நேரடியாக தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு எந்த வகையிலும் ஆட்சேபனை எழுப்புவதற்கான வழிமுறைகள் வழங்கப்படாது. மசூத் அசாருக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகவே வரைவு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவது எப்போது? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மசூத் அசாருக்கு எதிராக பொருளாதார தடை, ஆயுத தடை மற்றும் போக்குவரத்து தடைகள் விதிக்கப்படுவதுடன் அவரது பெயர் ஐ.நா.வின் கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்படும். இதற்கிடையே நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என சீனா கூறுகிறது. இந்த விவகாரத்தில் கவனமுடன் செயல்படுமாறும், வரைவு தீர்மானத்தை வலுக்கட்டாயமாக தாக்கல் செய்வதை நிறுத்துமாறும் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் பேசுகையில், மசூத் அஸாருக்கு எதிரான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா வலுக்கட்டாயமாகத் தாக்கல் செய்துள்ளது. தடை ஆலோசனைக் குழுவை மீறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானத்தை நேரடியாகத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சட்டவிதிகளை அமெரிக்கா மீறியுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான தீர்வு காண, சீனாவுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்குத் தடை ஏற்படுத்தினோம் என்றார்.