மிகப்பெரிய அளவிற்கு ரெய்டு… முன்கூட்டியே ஆளும் கட்சியை அலார்ட் செய்த கேப் நிறுவன டிரைவர்…!

Read Time:2 Minute, 42 Second

கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் 15 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையின் சோதனையில் ரூ. 1.66 கோடி சிக்கியது என தகவல் வெளியாகியது. வருமான வரித்துறை பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுகிறது, அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த குமாரசாமி, பிரதமர் மோடியின் உண்மையான துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) இந்த வருமான வரி சோதனை மூலம் பகிரங்கமாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு அரசியலமைப்பு பதவி வழங்குவதாக பிரதமர் உறுதியளித்து, அதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறார். தேர்தல் நேரத்தில் அரசு எந்திரம், ஊழல் அதிகாரிகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவது என்பது மிகவும் வருந்தத்தக்கது என்றார். ஆனால் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பற்றி முன்பே (நேற்று முன்தினம்) குமாரசாமிக்கு தெரிந்துள்ளது.

சோதனையை மேற்கொள்ள வருமான வரித்துறையினர் தரப்பில் கேப் நிறுவனம் ஒன்றில் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்கள் மண்டியா, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கட்சியின் மகளிர் அணி தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பெண் ஒருவர் குமாரசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் வெளியானதால் சோதனையை வருமான வரித்துறையினர் அதிக இடங்களில் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே, வருமான வரி சோதனை விவரம் முன்கூட்டியே தெரிய காரணமாக இருந்த வாடகை கார் டிரைவரை அதிகாரிகள் கண்டுப்பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.