பாதுகாப்பு ஒப்பந்தங்களை காங்கிரஸ் ஏடிஎம் போன்று பயன்படுத்தியது – பிரதமர் மோடி தாக்கு

Read Time:2 Minute, 26 Second

பாதுகாப்பு ஒப்பந்தங்களை காங்கிரஸ் அரசு அவர்களுடைய ஏடிஎம் போன்று பயன்படுத்தியது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். “உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்க வேண்டும் என்று விரும்பியது யார்? தேசத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியது யார்? குற்றச்சாடுக்களை முன்வைக்கும் முன்னதாக தங்களை கண்ணாடியில் பார்க்க வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பீமாராவ் லோகூர் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து தலைமை நீதிபதி மிஸ்ராவை பதவி நீக்க கோரி தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தது. இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் ஊழல் என குற்றம் சாட்டுவதற்கு, “முந்தைய காங்கிரஸ் அரசுக்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்களை அவர்களுக்கான ஏடிஎம் போன்று பயன்படுத்தியது. இப்போது வெளிப்படையாக ஒப்பந்தம் நடைபெறுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை,” என்றார்.

இப்போது வறுமையை ஒழிப்போம், ஏழைகளுக்கு பணம் வழங்குவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது. “ஒரே குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக வறுமையை அகற்றுவதை பற்றி பேசிகிறார்கள். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பேசினர். இப்போது ராகுல் காந்தி அதைப் பற்றி பேசுகிறார்… ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர் என்பது அவர்களுடைய சாதனையை காட்டுகிறது. இப்போது யார் அவர்களை நம்புவார்?,” என கேள்வியை எழுப்பியுள்ளார்.