வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட வேண்டுமா? புயலாக கிளம்பிய பிரியங்கா…!

Read Time:4 Minute, 11 Second

வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட வேண்டுமா? என தொண்டர்களிடம் கேள்வியை எழுப்பி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையை பிரியங்கா வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸை ஒரு பொருட்டாக மதிக்காமல் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்தது. இதன் பின்னர் தீவிர அரசியலில் களமிறங்கினார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்காவின் அரசியல் பயணம் காங்கிரஸை வலுப்படுத்தும் என அக்கட்சியின் தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது. உ.பி. செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு பிரியங்காவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதாவின் கேள்விகளுக்கு பதில்களையும் கொடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். பிரியங்காவின் வருகை வாக்குகளை பிரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கு வெற்றி என்பதை கணிப்பது கடினமானது என்றே பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, கவுரிகஞ்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் தொண்டர்களிடம், நீங்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டீர்களா? நான் 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலைப் பற்றி பேசவில்லை; ஆனால் 2022 உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலை கேட்கிறேன் என்றார். தேர்தல்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜனவரி 23-ம் தேதியன்று உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட போது, கட்சித் தலைவரான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், பிரியங்கா வெறுமனே 4 மாதங்களுக்காக அங்கு அனுப்பப்படவில்லை; அவர் பெரிய திட்டத்துடன்தான் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.பா.ஜனதாவை 2019-ல் மட்டும் அல்ல, 2022-லும் தோற்கடிப்போம் என்று கூறியிருந்தார். இப்போது பிரியங்கா காந்தியின் பேச்சு அதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வாரணாசியில் போட்டி?

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். பிரியங்கா காந்தி, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு சோனியாவே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ரேபரேலியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்காவிடம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வாரணாசியில் போட்டியிட வேண்டுமா? என்ற பதில் கேள்வியை பிரியங்கா எழுப்பியுள்ளார். ஏற்கனவே கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன் என்ற பிரியங்காவின் வாரணாசியில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்வி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.