‘குற்றப் பரம்பரை’ விவகாரம்… நான் சொன்னது திமுக ஊழல் குடும்பத்தைதான் தமிழிசை விளக்கம்

Read Time:3 Minute, 3 Second

திமுகவைதான் குற்றப் பரம்பரையென நான் குறிப்பிட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார். தமிழிசை வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை நேரிட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியிருந்தது. இதனையடுத்து திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் தமிழிசை டுவிட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டார். திமுவை விமர்சனம் செய்யும் வகையில் எதுகை, மோனையில் அவர் வெளியிட்ட தகவல் தவறாக பரப்பப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் குறிப்பிட்ட சமுகத்தினர் குற்றப்பரம்பரை என அறிவிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டனர், அதற்கு எதிராக முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் போராடி சுதந்திரத்துக்குப்பின் அது நீக்கப்பட்டு நீர்த்துப்போனது. இப்போது தமிழிசை திமுகவை மையப்படுத்தி குற்றப்பரம்பரை என குறிப்பிட்டது சரியாக அவருக்கு எதிராக திசைதிருப்பப்பட்டது. இதனையடுத்து டுவிட்டை நீக்கிய தமிழிசை, நான் குற்றப் பரம்பரையென குறிப்பிட்ட திமுகவைதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற அமர்வின் இடையே தி.மு.க வினர் எனது கணவரையும், குடும்பத்தினர் மீது வீண் அவதூறு பரப்பும் வகையில் அவர் தன் குற்ற வழக்குகளையும், வருமானத்தையும் மறைத்ததாக பொய்யான புகாரை அளித்த போது எனது கணவர் புகழை கெடுக்கும் விதத்தில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் குற்றபரம்பரை என நான் குறிப்பிட்டது தமிழகத்தை ஆண்ட தி.மு.க ஊழல் குடும்பம், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான். தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்கள் என கொண்ட நான் என்றும் போற்றும் பரம்பரை பற்றியென வழக்கம்போல் திரித்துக்கூறும் தி.மு.கவினரை வன்மையாக கண்டிக்கிறேன்… என குறிப்பிட்டுள்ளார்.