டிடிவி தினகரன் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம்…

Read Time:2 Minute, 29 Second

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுவான தேர்தல் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தனிக்கட்சியாக தொடங்கினால் இரட்டை இலைக்கு உரிமை கோர முடியாது என்பதால் தனி அணியாக தேர்தல் கட்சியாக பதிவு செய்யாமல் டிடிவி தினகரனின் அமமுக இயங்கி வருகிறது. இரட்டை இலை வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர்சின்னம் கேட்டு டிடிவி அணி உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது, பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்கக்கூடாது என அதிமுக தரப்பில் எதிர்க்கப்பட்டது.

தேர்தல் ஆணையமும் பதிவு செய்யப்படாத கட்சிக்கு தனிச்சின்னம் வழங்குவது தேவையற்ற முன்னுதாரணத்தை உருவாக்கும் என்பதால் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டது.

குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றம், நிலைமையை கருத்தில் கொண்டு டிடிவி தினகரன் அணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இருப்பினும் அவர்கள் தேர்தலில் வென்றால் சுயேச்சையாக தான் கருதப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் சின்னம் இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை நீடித்தது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் தரப்பில் டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகள் பாண்டிச்சேரி 1 தொகுதி, தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 59 தொகுதிகளில் டிடிவி அணிக்கு அவருக்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.