காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்கள்…!

Read Time:2 Minute, 37 Second

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான போரை மறைமுகமாக முன்னெடுக்க பயங்கரவாதிகளை பயன்படுத்துகிறது. காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளிடம் அமெரிக்கா மற்றும் சீனா தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கொடுக்கப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்கு செல்கிறது.

இன்று காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டை வெடித்தது. அப்போது இரு ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம் 4 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற எம் 4 ரக துப்பாக்கியை இந்திய ராணுவம் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சண்டைகளில் மசூத் அசாருக்கு நெருக்கமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட போது இவ்வகை எம்4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

30 பயங்கரவாதிகள் வேட்டை

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 உயர்மட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழாவது பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.