“மிஷன் சக்தி” சோதனையில் இந்தியா வெற்றி, எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா…!

Read Time:2 Minute, 55 Second

“மிஷன் சக்தி” சோதனையில் இந்தியா வெற்றியடைந்ததை அடுத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்ற கடந்த 1967-ம் ஆண்டைய சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். எதிரி நாட்டு செயற்கைகோள் உளவு பார்க்க வந்தால் அதை சுட்டு வீழ்த்தும் வல்லமை இந்தியாவுக்கு ‘மி‌ஷன் சக்தி’ திட்டத்தின் பலனாக கிடைத்துள்ளது. இது எந்த நாட்டுக்கும் எதிரான சோதனை கிடையாது. நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்வதிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதிலும் இந்தியா முனைப்போடு இந்நகர்வை முன்னெடுத்துள்ளது.

300 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைகோளை முன்கூட்டியே இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. விண்வெளி குப்பை தோன்றிவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் உருவாகும் குப்பை அனைத்தும் சில வாரங்களில் பூமியை வந்தடையும்.

அமெரிக்கா எச்சரிக்கை

இந்நிலையில் “மிஷன் சக்தி” சோதனையால் விண்வெளியில் கழிவுகள் தங்கும் அபாயம் உள்ளது அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் பேசுகையில், செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம். விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார். இந்தியாவின் சோதனையை ஆய்வு செய்கிறோம் என அமெரிக்க ராணுவ தலைமையகம் பெண்டகனும் தெரிவித்துள்ளது.