மம்தாவிற்கு ‘டப்-பைட்’ கொடுக்கும் பா.ஜனதா…! அதிக தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு

Read Time:3 Minute, 36 Second

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கடும் போட்டியை கொடுக்கும், கடந்த தேர்தலைவிட 4 மடங்கு அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இடதுசாரிகளின் 30 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மம்தாவிற்கு சவாலாக பா.ஜனதா உருவெடுத்து வருகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் சாதனை படைத்தது. 

ஆனால் சமீபத்திய இடைத்தேர்தல்கள், நகராட்சி தேர்தல்களில் திரிணாமுலுக்கு அடுத்த இடத்தை பா.ஜனதா பிடித்தது. 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டியிருக்கும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 32 தொகுதிகள் வரைதான் வெற்றிப்பெறும், பா.ஜனதா 8 இடங்களை பிடிக்கும், பிற தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு செல்லலாம் என பார்க்கப்படுகிறது. 

ஏபிபி மற்றும் நீல்சன் நடத்திய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 42 இடங்களில் 31 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் 39.4 சதவீத வாக்குகளைக் கைப்பற்றி 34 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. இப்போது 3 தொகுதிகள் குறைவாகவே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவே பா.ஜனதாவை பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 2 இடங்களைப் பெற்று 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் பா.ஜனதாவின் செயல்பாடு, பிரச்சாரம், போராட்டம், பேரணி ஆகியவற்றால் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 2014-ம் ஆண்டைக்காட்டிலும், 4 மடங்கு இடங்களில் பா.ஜனதா வெல்லுக்கூடும், 26 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. பா.ஜனதா 8 தொகுதிகளை வெல்லும் என தெரிவிக்கப்படுகிறது. 

மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலை மிகவும் மோசமாகும் என தெரிகிறது. அக்கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவும் என தெரியவந்துள்ளது. அங்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும் என செயல்படும் பா.ஜனதாவிற்கு பலன் கிடைக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.