இந்தியா விண்வெளியில் சொந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது…

Read Time:9 Minute, 43 Second

இந்தியா மார்ச் 27-ம் தேதி விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏ-சாட் ஏவுகணையை ஏவி சொந்த ஏவுகணையை அழித்து ‘மிஷன் சக்தி’யை வெற்றிகரமாக முடித்தது. இந்தியாவில் உளவு பார்க்கும் எதிரிகளின் ஏவுகணையை தாக்கவும், அவற்றை செயல் இழக்கச்செய்யவும், அவைகளின் தகவல் தொடர்பில் தடையை ஏற்படுத்தவும் முடியும்.

ஜனவரி 24-ம் தேதி ஏவப்பட்ட இந்திய ராணுவத்தின் மைக்ரோசாட் ஆர் என்ற 750 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோளை ஏ-சாட் ஏவுகணை சிதறடித்தது. சோதனைக்காக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜனவரியில் செயற்கைக்கோள் ஏவப்பட்ட போது, புவி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக மைக்ரோசாட் – ஆர் என்ற இமேஜிங் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணியாகும். இதில் 3-டி கேமராக்கள், லேசர் கருவிகள் உட்பட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

ஒடிசா கடலோரத் தீவான அப்துல் கலாம் தீவில் மிஷன் சக்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

செயற்கைக்கோளை அழிக்கும் முறை


ஏ-சாட் ஏவுகணை

விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளின் பணியில் தடையை ஏற்படுத்தவோ, அழிக்கவோ, இவ்வகை ஏவுகணைகள் விமானப்படை விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் தரையில் இருந்து ஏவப்படும். ஏவுகணைகள் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் மீது பாய்ந்து சிதறச்செய்கிறது. இதுவரையில் அமெரிக்கா, ரஷியா, சீனாவிடம் மட்டும் இத்தகைய வசதி இருந்தது. இப்போது 4 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்தியா தரையில் இருந்து மேற்கொள்ளும் சோதனையில் வெற்றியை தனதாக்கியுள்ளது.

செயற்கைக்கோளை அழிக்கும் முறை.

விண்வெளி பாதுகாப்பு

ஏவுகணைகள் மூலம் செயற்கைக்கோளை அழிப்பதால் விண்வெளியில் குப்பைகள் தங்கலாம். அவைகள் செயல்பாட்டில் இருக்கும் பிற செயற்கைக்கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் பூமியை நோக்கி கீழேவரும். அல்லது குப்பையாகவே விண்வெளியில் தங்கும் அபாயம் உள்ளது. இந்தியா குப்பைகள் பூமியை நோக்கி விரையும் வகையில் குறைந்த தொலைவில் அதாவது 300 கிலோ மீட்டர் இலக்கை நிர்ணயம் செய்து சோதனையை மேற்கொண்டது. இதனால் குப்பைகள் விரைவில் பூமிக்குவரும்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி செயல்பாட்டில் இல்லாத செயற்கைகோள்கள் மற்றும் குப்பைகளை கையாள பல்வேறு முறைகளை கொண்டுள்ளது. ரோப்போட்டிக் ஆர்ம் மற்றும் வலைகளைக் கொண்டும் செயற்கைக்கோளை கட்டுக்குள் கொண்டுவருகிறது.

முந்தைய ஆராய்ச்சிகள்

விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்து, அமெரிக்கா, ரஷியா, சீனாவிற்கு அடுத்து இவ்வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. முந்தைய பரிசோதனைகள் விபரம்:-


1959 அமெரிக்கா முதல் முறையாக செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்தியது.


1960களில் ரஷியா விண்வெளியில் ஏவுகணையை சிதறடிக்கும் வகையிலான ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. 1970 வரையில் சோதனை தொடர்ந்தது.


பின்னர் 11 ஆண்டுகள் எந்தஒரு பரிசோதனையும் இதுதொடர்பாக நடத்தப்படவில்லை.


1985 அமெரிக்கா ASM-135 என்ற ஏவுகணையை எப்-15 போர் விமானத்தில் இருந்து ஏவியது. இது சோல்விண்ட் பி78-1 என்ற அமெரிக்க செயற்கைக்கோளை அழித்தது.


பின்னர் 21 ஆண்டுகள் எந்தஒரு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.


2007 செயற்கைக்கோள்களை அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா இணைந்தது. அந்நாட்டின் வானிலை ஆய்வு செயற்கைக்கோளை மிகவும் உயரத்தில் வைத்து அழித்தது. இதனால் விண்வெளியில் பெரும் குப்பை நேரிட்டது. செயற்கைக்கோள் 3000 துண்டுகளாக சிதைந்தது. இதனால் பிற செயற்கைக்கோள்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


2008 அமெரிக்கா கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி செயல்பாட்டில் இல்லாத உளவு செயற்கைக்கோளை அழித்தது.


10 வருடங்களாக எந்தஒரு சோதனையும் இதுதொடர்பாக நடைபெறவில்லை.


2019 மார்ச் இந்தியா விண்வெளியில் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை வெற்றிகரமாக அழித்து சாதனை நிகழ்த்தியது.


புவி சுற்றுவட்டப்பாதை தொகுப்பு

இந்தியா குறைந்த தொலைவாக 300 கிலோ மீட்டரை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதனால் விண்வெளியில் குப்பைகள் தங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 நவம்பர் வரையிலான தகவலின்படி புவியின் சுற்றுவட்டப்பாதையில் 1,950க்கும் அதிகமான செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அவைகளில் பெரும்பாலானவை தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதையில் (Lower Earth Orbit) செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டது.


புவி சுற்றுவட்டப்பாதை தொகுப்பு.

புவி சுற்றுவட்டப்பாதையின் வகைகள்:-


* தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதை Lower Earth Orbit (LEO)

* மீடியம் புவி சுற்றுவட்டப்பாதை Medium Earth Orbit (MEO)

* ஜியோஸ்டேஷனரி கோளப்பாதை Geostationary Earth Orbit (GEO)

* நீள்சதுர கோளப்பாதை Highly elliptical orbit (HEO)


தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதை Lower Earth Orbit (LEO)

தாழ்மட்ட புவி சுற்றுவட்டப்பாதையென்பது 80 முதல் 2000 கிலோ மிட்டர் தொலைவு வரையிலான பகுதியை குறிக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் பெரும்பான்மையான செயற்கைகோள்கள் அமைந்துள்ள இடமாக LEO உள்ளது. இந்தியாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை பூமிக்கு சுமார் 300 கி.மீ. தொலைவில் இருந்த செயற்கைக்கோளை அழித்தது.


மீடியம் புவி சுற்றுவட்டப்பாதை Medium Earth Orbit (MEO)

மீடியம் அல்லது நடுநிலை புவி சுற்றுவட்டப்பாதை என்பது 2,000 கிலோ மீட்டரில் இருந்து 35,786 கிலோ மீட்டர் வரையிலான பகுதியாகும். இங்கு மொத்தம் 124 செயற்கைக்கோள்கள் இயங்கி வருகிறது. இவைகளில் பெரும்பாலனவை பூமியின் வரைப்படத்திற்காக, வழிகாட்டலுக்காக பயன்படுத்தப்படுகிறது.


ஜியோஸ்டேஷனரி கோளப்பாதை Geostationary Earth Orbit (GEO)

ஜியோஸ்டேஷனரி கோளப்பாதை என்பது 35,786 அப்பால் உயரத்தில் பூமியின் சுழற்சியின் பின்வருவதாகும். இங்கு 558 செயற்கைகோள்கள் அமைந்துள்ளன, இதில் 85 சதவிகிதம் தகவல்தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் இங்குதான் உள்ளன.


நீள்சதுர கோளப்பாதை Highly elliptical orbit (HEO)

நீள்சதுர கோளப்பாதை ஒருநேரம் பூமிக்கு அருகாமையில் வரும், பிரிதொரு நேரம் வெகு தொலைவிற்கு செல்லும். இங்கு 45 செயற்கைக்கோள்கள் இயங்கி வருகிறது. இவற்றில் பாதிக்கும் மேல் அமெரிக்காவிற்கு சொந்தமானது.


இந்தியாவின் செயற்கைக்கோள்க பெரும்பாலானவை அரசுக்கு சொந்தமானவையாகும். விண்வெளியில் அமெரிக்காவிற்கு சொந்தமான செயற்கைக்கோகள்தான் அதிகமாக இருக்கிறது. 830 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானது. இதற்கு அடுத்தப்படியாக சீனாவின் செயற்கைக்கோள்கள் உள்ளன. 280 செயற்கைக்கோள்கள் சீனாவிற்கு சொந்தமானது. இந்தியவிற்கு சொந்தமானவை 54 செயற்கைக்கோள்களாகும்.

எல்லா சவால்களையும் மேற்கொண்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 18 டன் எடையுள்ள ஏவுகணையைக் கொண்டு 300 கிமீ உயரத்தில் பறந்த இந்திய செயற்கைக்கோளை ராணுவ விஞ்ஞானிகள் முதல் முயற்சியிலேயே துல்லியமாக தாக்கியது விண்வெளி பாதுகாப்பின் இமாலய சாதனையாகும்.