ஆன்-லைன் சவாலில் அசத்தல்… கூகுளில் இந்திய மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை…!

Read Time:3 Minute, 46 Second

உலகின் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும் என்பது தொழில்நுட்பத்துறையில் இருக்கும் பலருக்குமான இலக்காக இருக்கும். இப்போது இந்தியாவை சேர்ந்த மாணவருக்கு கூகுளில் மாதம் ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. இந்தியாவில் மதிப்புமிக்க ஐஐடியில் சேர நுழைவு தேர்வுகளில் தோல்வியை தழுவிய மாணவர் கூகுள் நடத்திய ஆன்-லைன் சவாலில் அசத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா கான்(வயது21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் இணையதளங்களில் நடத்தப்படும் மென்பொருள்(சாப்ட்வேர்) தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கூகுள் நிறுவனம் நடத்திய மென்பொருள் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டார். அதன் மூலமாக அந்த நிறுவனம் அவரது திறமையை தெரிந்து கொண்டது.

இதையடுத்து அவருக்கு கூகுள் நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக அப்துல்கானுக்கு இ-மெயில் அனுப்பியது. அதைப்பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கூகுள் நிறுவனம் நடத்திய ஆன்-லைன் தேர்வில் பெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவரை நேர்முகத்தேர்வுக்காக லண்டனுக்கு அழைத்து கூகுள் நிறுவனம் தேர்வு நடத்தியது. இதிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு வேலையை கூகுள் நிறுவனம் வழங்கியது.

அப்துல்கானுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்தை சம்பளமாக கொடுக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. அவர் வரும் நவம்பர் மாதம் கூகுளில் பணியில் சேர உள்ளார்.

மாணவர் அப்துல்லா கான் பேசுகையில், “என்னால் நம்பவே முடியவில்லை. விளையாட்டுக்காகவே புரோகிராமிங் சவால்களில் கலந்துக்கொள்வேன். என்னுடைய படிப்புக்கு பெற்றோர்கள், நண்பர்கள் எப்போது உறுதுணையாக இருப்பார்கள். என்னுடைய சம்பளம் பற்றியெல்லாம் எனக்கு பெரிய யோசனை கிடையாது. கூகுள் கடிதத்தில் பார்த்ததும் அதிர்ச்சியாகி, அவர்களிடமே மீண்டும் கேட்டேன். என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன். இறுதி செமஸ்டருக்காக தயாராகி வருகின்றேன். கூகுள் நிறுவனம் எனக்கு ஸ்பான்சர் செய்து இங்கிலாந்து அழைத்து சென்றது மறக்க முடியாத தருணம்,” எனக் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனம் இதுபோன்று அதிகமான சம்பளத்திற்கு இந்திய மாணவர்களை எடுப்பது இது முதல்முறை கிடையாது. 2018-ம் ஆண்டு ஐஐடி ஐதராபாத்தில் இருந்து மாணவி சினேகா ரெட்டியை ரூ. 1.2 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்தது. ஐஐடி ஐதராபாத் தொடங்கப்பட்டத்தில் இருந்து அதிகமான சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற மாணவி இவர்தான் என்று கூறப்பட்டது.