இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை உளவுப்பார்த்த அமெரிக்க விமானப்படை…!

Read Time:3 Minute, 30 Second

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை அமெரிக்காவின் விமானப்படை விமானம் உளவு பார்த்தது என தகவல் வெளியாகியுள்ளது.

மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் ‘ஏ – சாட்’ எனப்படும், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா மார்ச் 27-ம் தேதி வெற்றிக்கரமாக நடத்தியது. இதனை அமெரிக்கா உளவு பார்த்து உள்ளது என தகவல் வெளியாகியது.

சர்வதேச அளவில் உலக நாடுகளின் விமானப்படை விமானங்களை கண்காணிக்கும் ஏர்கிராப்ட் ஸ்பார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் டிகோ கார்கியோவில் இருந்து வந்த அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று இந்தியாவின் மிஷன் சக்தி திட்ட பரிசோதனையை உளவு பார்க்க வந்துள்ளது. வங்க கடலில் இந்தியாவின் சோதனையை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவின் உளவு விமானம் (USAF RC-135S 62-4128 CHAOS45) புறப்பட்டு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் டிகோ கார்கியில் அமெரிக்காவின் ராணுவ தளத்தில் உளவுப் பணிக்காக RC-135S விமானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மறுப்பு

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தின் சோதனையை விமானப்படை விமானத்தை ஏவி உளவு பார்த்ததாக வெளியான தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் மறுத்துள்ளது. “இந்தியாவை அமெரிக்காவின் எந்தஒரு விமானமும் உளவு பார்க்கவில்லை. இந்தியாவுடான உறவை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் விளைவாக வலுவான பொருளாதார உறவு ஏற்பட்டுள்ளது,” என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் டேவின் எவஸ்ட்பர்ன் கூறியுள்ளார்.

மிஷன் சக்தி திட்டத்தை உளவு பார்க்கவில்லை என கூறும் அமெரிக்காவிற்கு திட்டம் பற்றி முன்கூட்டியே தெரியும் என தெரிகிறது.

இந்தியாவின் திட்டத்தை உளவுப்பார்க்க அமெரிக்கா விமானத்தை ஏவியது தொடர்பாக ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானூர்தி மையத்தை சேர்ந்த வானியல் நிபுணர் ஜொனாதன் மெக்டவல் பேசுகையில், “இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை குறிக்கிறது என நினைக்கவில்லை,” என்கிறார்.

“இது அமெரிக்க உளவுத்துறையினர் முன்கூட்டியே இந்தியாவின் சோதனையை தெரிந்து இருப்பதை குறிக்கிறது, எனவேதான் அவர்கள் இந்தியாவில் உளவுபார்க்க முற்பட்டுள்ளனர். உலகநாடுகள் ஒவ்வொன்றும் அவர்களுடைய நட்பு நாடுகளை உளவு பார்க்கதான் செய்கின்றன. உலகம் முழுவதும் இதுதான் நிலையாகும். இந்தியாவின் சோதனையை அமெரிக்கா உளவுப்பார்க்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம் அளிக்கும் விஷயாமாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.