வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? ஏன்?

Read Time:3 Minute, 11 Second

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது புது தொகுதியாக பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் வயநாடு மாவட்டத்தில் உள்ள, மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எரநாடு, நிலம்பூர், வண்டூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளடங்குகிறது. இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது. வயநாடை பொறுத்தவரையில் காங்கிரசுக்கு நல்ல வாக்கு வங்கியுள்ளது.

காங்கிரஸ் கடந்த கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலிலும் வெற்றியை தனதாக்கியது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.ஷாநவாஸ் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளரை தோற்கடித்துள்ளார். எம்.பி. ஷாநவாஸ் கடந்த ஆண்டு காலமாகியதால் தொகுதி காலியாகியது. இருப்பினும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 97 வாக்காளர்கள் இருந்தனர். ஷாநவாஸ் அதில் 4.10 லட்சம் வாக்குகளை(59.86 சதவிதம்) பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரஹ்மத்துல்லா 2.57 லட்சம் வாக்குகள் (31.23 சதவீதம்) பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜனதாவிற்கு 3.85 சதவித வாக்குகள் கிடைத்ததது. பா.ஜனதா வேட்பாளர் சி.வாசுதேவன் மாஸ்டர் 31,687 வாக்குகள் பெற்றார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி கடினமாக இருந்தது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் களமிறங்கிய ஷாநவாசுக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் மோகேரிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் என்பது 20 ஆயிரம் வாக்குகள்தான். ஷாநவாஸ் 3.77 லட்சம் வாக்குகள் ( 30.18 சதவீதம்) பெற்றார்.  சிபிஐ வேட்பாளர் சத்யன் 3.56 லட்சம் (28.51) சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜனதாவின் வாக்கு வங்கி உயர்ந்து காணப்பட்டது. பா.ஜனதா வேட்பாளர் பி.ஆர்.ரஸ்மில்நாத் 80 ஆயிரத்து 752 வாக்குகள் (6.46 சதவீதம்) பெற்றார்க. வயநாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பானது, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் தொகுதி என்பதால், ராகுல் காந்தியை இங்கு போட்டியிட கேரள காங்கிரஸ் கட்சியினர் அழைத்தனர். ராகுல் காந்தி எளிதாக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என்றே பார்க்கப்படுகிறது.