பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? காங்கிரசுக்கு பிரதமர் மோடி பதிலடி

Read Time:4 Minute, 10 Second

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? என ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

விண்வெளியில் செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இதனை பிரதமர் மோடி மக்களிடம் உரையாடியதை எதிர்க்கட்சிகள் சர்ச்சையாகியது. விஞ்ஞானிகளை பாராட்டிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தன. இதில் விதிமீறல் இல்லையென தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்கையில், மிஷன் சக்தி சோதனையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், அறிவில்லாத அரசுதான் இத்தகைய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் என்றார்.

இதற்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் ‘பாரத்வர்ஷ்’ புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், செயற்கைகோள் எதிர்ப்பு சக்தியை இந்திய பாதுகாப்புத்துறை ஏற்கனவே பெற்றிருந்தும், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதிப்பதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் ஈடுபாடு இல்லை. ஆனால் எங்கள் அரசுக்கு அத்தகைய அழுத்தங்களை தாங்கும் சக்தி இருக்கிறது. எனவே நாட்டு நலன் கருதி உடனடி முடிவுகள் எடுக்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் (ப.சிதம்பரம்), தான் ஒரு மிகுந்த அறிவாளி என கருதுகிறார். செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். அப்படியானால் 1974-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? என கேள்வியை எழுப்பியுள்ளார். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு செல்வதை ரகசியமாக வைத்திருக்க முடியும் என காங்கிரசை கடுமையாக சாடினார். காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, கருப்பு பணம் ஒழிப்புக்காக காங்கிரஸ் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரபேல் விவகாரத்தில் ஊழல் என பொய் பிரசாரம் செய்யப்படுகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள்தான் ஊழல்களை செய்தவர்கள், அவர்களுக்கு தேசத்தைவிடவும் சொந்த நலன்தான் முக்கியமாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படை

பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை வீரர்கள்தான். நான் கிடையாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் தேர்தல் முடியும் வரையில் இருநாடுகள் இடையிலான உறவு பதற்றமாகவே காணப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, நான் தேர்தல்களில் மிகவும் பிஸியாக இருப்பேன் என்று பாகிஸ்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஒன்றை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கு தேசம் தான் முக்கியம், அதற்குதான் முன்னுரிமை கொடுப்பேன், தேர்தலுக்கு அல்ல,” என கூறியுள்ளார்.