‘மிஷன் சக்தி’ வெற்றியை அடுத்து எதிரிகளின் ரேடாரை கண்டறியும் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியது

Read Time:2 Minute, 58 Second

இந்தியாவின் எமிசாட் செயற்கைக் கோள் மற்றும் பிறநாடுகளின் 28 சிறிய செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி45 ராக்கெட் காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ராணுவப் பயன்பாட்டுக்கான ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 436 கிலோ எடையுடையது. மின்காந்த அலைக்கற்றைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது.

விண்வெளியில் எதிரிநாடுகளில் செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்தது. இப்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள எமிசாட் செயற்கைக்கோள் விண்வெளியில் எதிரிகளின் ரேடாரை கண்டறியும் விதமானது என தகவல்கள் தெரிவிப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. எதிரிநாடுகளில் ரேடார்களின் செயல்பாடு, இடம் குறித்தான தகவல்களை எமிசாட் கண்காணிக்கும். இந்திய இதுவரையில் இதுபோன்ற பணிகளுக்கு விமானங்களை பயன்படுத்தியது. இப்போது எளிதான முறையில் கண்டுபிடிக்க பாதுகாப்பு படைக்கு எமிசாட் உதவியாக இருக்கும்.

இந்தியா மற்றொரு சாதனையையும் இதன் மூலம் நடத்தியுள்ளது. உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்டு 749 கி.மீட்டரை அடைந்ததும் எமிசாட்டும், 505 கிமீ துாரத்தில் 220 கிலோ எடையுடைய 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முதல்முறையாக பூமியின் வெவ்வேறு நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 749 கி.மீ தொலைவில், அதாவது செலுத்தப்பட்ட 17 நிமிடங்களில் எமிசாட் செயற்கைக்கோள் விடுவிக்கப்பட்டது. மற்ற செயற்கைக்கோள்கள் 504 கி.மீ தொலைவில் அதாவது 40 நிமிடங்களில் விடுவிக்கப்பட்டது.