பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

Read Time:2 Minute, 20 Second

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படங்களை கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். நடிகர் ரஜினியை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். சபாஷ் தம்பி, நிறைகுடம், கங்கா, திருடி உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். அவர் கடைசியாக இயக்கிய படம் 2006-ம் ஆண்டு வெளியான சாசனம் படமாகும்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார். அதில் வில்லனாக மிரட்டியிருந்தார். நிமிர், Mr. சந்திரமெளலி, சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கரு.பழனியப்பன் இயக்கிவரும் புகழேந்தி எனும் நான் படத்தில் அருள்நிதியுடன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.