12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Read Time:7 Minute, 19 Second

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

1) குறிபிட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பாரபட்சமாக அமைந்துள்ளது. மேலும், அந்தந்த மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது. எனவே ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2) இதற்கு பதிலாக மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, மாநில அளவில் தகுதி வாய்ந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

3) பள்ளிக்கல்வி மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படு்ம், உயர்கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கும்.

4) 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச, கட்டாயக் கல்வி அமல்படுத்தப்படும்.

5) கல்வி கற்பிக்கும் திறன் அதிகப்படுத்தப்பட்டு, தொழில்அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறைகள் புகுத்தப்படும்.

6) பள்ளிக்கல்வியோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும், சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும். கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி காக்கப்படும்.

7) மாணவர்களுக்கான உரிமை மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

குறைந்தவருவாய் திட்டம்

1) ஏழ்மையை ஒழிக்கும் வகையில் குறைந்த பட்ச வருமானம் ஆதரவு திட்டம்(நியாயம்) செயல்படுத்தப்படும்.

2) நியாயம் திட்டம் மூலம் 5 கோடி ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

3) ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச வருமானம் பெறுவார்கள். அந்த பணம் குடும்பங்களில் உள்ள பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்

வேளாண்மை

1) ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியப்பிரதேசங்களி்ல விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போல் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

2) விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் போன்று விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் கொண்டுவரப்படும்.

3) பா.ஜனதா அரசு கொண்டு வந்த பயிற்காப்பீட்டு திட்டம் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு, புதிதாக வடிவமைக்கப்படும்.

4) வேளாண்துறையில் பெண்கள் ஈடுபட்டுவந்தால், அவர்களுக்கு வேளாண் உரிமைகளும், திட்டங்களின் பலனும் கிடைக்க உறுதி செய்யப்படும். நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் உணவு தானியங்களை சேமித்து வைக்கும் குளிப்பதன கிடங்குகள், தானிய கிடங்குகள் அமைக்கப்படும்.

வேலைவாய்ப்பு


தற்போதைய வேலைகளை காக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மிக அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும். மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணி இடங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும். இதன்மூலம் பொதுத்துறையில் 34 லட்சம் பேர் வேலை செய்வது உறுதி செய்யப்படும்.


மாநிலங்களில் 20 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புமாறு மாநில அரசுகள் வலியுறுத்தப்படும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் 10 லட்சம் புதிய சேவா மித்ரா பணியிடங்கள் உருவாக்கப்படும்.


வேலைகளை கூடுதலாக உருவாக்கவும், பெண்களை அதிகளவில் பணி அமர்த்தவும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.


சுகாதாரத்துறை


சுகாதார காப்பீடு உரிமை என்று ஆக்கும் வகையில் சுகாதார காப்பீட்டு உரிமை சட்டம் இயற்றப்படும்.


ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச நோய் அறிதல், புறநோயாளி சிகிச்சை, இலவச மருந்துகள், மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும். இது பொது மருத்துவமனைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.


2023-24 வாக்கில், சுகாதார செலவினம் இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்கும்.


பிற முக்கிய அம்சங்கள்:-


ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான தேவைகளை சந்திக்கிற வகையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். படைகளை வெளிப்படையான முறையில், நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


துணை ராணுவ படைகளுக்கும், அவற்றின் குடும்பங்களுக்கும் சமூக பாதுகாப்பு, கல்வி, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.


தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு வழிவகை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124-ஏ, தவறாக பயன்படுத்தப்படுவதால் அது அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.