ரெயில்வே பிளாட்பார உணவகங்களில் ஜூஸ் விற்க தடை…!

Read Time:2 Minute, 42 Second

சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு வீடியோ எதிரொலி.. ரெயில் நிலைய பிளாட்பார உணவகங்களில் ஜூஸ்கள் தயார் செய்து விற்பனை செய்வதற்கு மத்திய ரெயில்வே தடை விதித்து உள்ளது.

மராட்டியத்தில் குர்லா ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார உணவகத்தில் விற்பனை செய்வதற்காக தொழிலாளி ஒருவர் லெமன் ஜூஸ் தயார் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகியது. சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயார் செய்யப்படும் காட்சியை பயணி ஒருவர் செல்போனில் படம் எடுத்து மத்திய ரெயில்வே டுவிட்டரியில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பலருடைய கருத்துக்களுடன் பகிரப்பட்டது. வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு…

வாளியொன்றில் எழுமிச்சை பழங்களை மொத்தமாக போட்டு பிசைந்து எடுக்கிறார். பின்னர் அங்கிருக்கும் டிரம்ப் ஒன்றிலிருக்கும் தண்ணீரை ஊற்றுகிறார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக ஆய்வு செய்த மத்திய ரெயில்வே அதிகாரிகள் அதிரடியாக அந்த பிளாட்பார உணவகத்துக்கு சீல் வைத்தனர்.


 
இதனையடுத்து மத்திய ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் பிளாட்பார உணவகங்களில் ஜூஸ்களை தயார் செய்து விற்பனை செய்வதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதன்படி இனி லெமன், ஆரஞ்சு, ரோஸ்மில்க் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்ய முடியாது. 

பயணிகளின் கண்முன்னால் தயாரித்து கொடுக்கப்படும் கேரட், பழ ஜூஸ்களை வழக்கம் போல் விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சுகாதாரமான முறையில் ஜூஸ் தயார் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய ஊழியர்களை நியமிக்க முடியாது. எனவே தான் இந்த வகையான ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.” என ரெயில்வே வணிகத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.