சைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

Read Time:10 Minute, 10 Second
Page Visited: 451
சைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

மணிக்கு ஒரு ரூபாய் கொடுத்து வாடகை சைக்கிள் எடுத்து ஒருநிமிடம் ‘வேஸ்ட்’ செய்துவிடக்கூடாது என்று நண்பர்களுடன் சைக்கிள் மிதித்து, வேர்வையாலும், மகிழ்ச்சியாலும் நனைந்து; சைக்கிளை திரும்ப ஒப்படைக்க மனமின்றி கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலையில் அதனை ஒப்படைத்துவிட்டு வரும்போது உணரும் ஒரு உற்சாகம் இருக்குமே, அதனை உணர்ந்தவர்களுக்குதான் தெரியும்.

மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கும் முழு உற்சாகம்தான். ஆனால் இப்போது விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் விஞ்ஞானப் பொருட்களாகிவிட்டன. குழந்தைகள் ரோபாவாக மாற்றப்படுகின்றனர். நாற்காலியிலோ, சோபாவிலோ இருந்துக்கொண்டு ஏதாவது ஒருபட்டனை அழுத்துவதே விளையாட்டாகிவிட்டது.

நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. இப்போது அது நாளுக்குநாள் குறைந்து கொண்டு வருகிறது. முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம்முடைய உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது அதுவெல்லாம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ கிடக்கிறது.

பலப் பொருட்கள் பழைய இரும்பு கடையில் கிடக்கிறது. இப்படி பலரால் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு வாகனம்தான் சைக்கிள். இப்போதைய தலைமுறையினரிடம் சைக்கிள் ஓட்டும் பழக்கம் மறைந்து வருகிறது. மிகவும் எளிமையானதும், எல்லார் வசதிக்கும் பெயர்போனதுமான சைக்கிள் இப்போது இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டாலும், அது தொடர்ந்து பயன்படுத்தும் பொருளாக தெரியவில்லை.

சைக்கிளிங் நன்மை.

உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு சைக்கிளிங் ஓர் எளிய பயிற்சியாகும். சைக்கிளிங் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி உலகம் முழுவதும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ம் தேதியை உலக சைக்கிள் தினமாக கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. அரை மணி நேர சைக்கிளிங் பயிற்சி செய்வதால் 300 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. சைக்கிளிங் போவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்:-

சுற்றுச்சூழலுக்கு நல்லது: இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்கள் காற்று மாசுபாட்டால் கொடூரமான நிலையை எதிர்க்கொண்டுள்ளது. பனிப்பொழிவு ஏற்படும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் நிலை மிகவும் மோசமடைகிறது. ஒவ்வொரு கோடையிலும் வெப்பமும் அதிகரிக்கிறது. உலகெங்கிலும் மோட்டார் வாகனப் பயன்பாடு அதிகரிப்பு மாசுபாட்டை அதிகரித்துள்ளது. பூமி வெப்பமாதலுக்கு வழிவகை செய்கிறது. எனவே மிதிவண்டிக்கு மாறுவது உங்களுடைய நகரை ஒரு சுகாதாரமான வசிப்பிட சூழலுக்கு மாற்ற உதவும்.

மன அழுத்தத்தை குறைக்கிறது: சைக்கிளிங் உங்கள் உடலில் இருந்து அட்ரினலின் மற்றும் எண்டோர்பின் வெளியீட்டை தூண்டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது மற்றும் ஒரே நேரத்தில் உங்கள் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது. இது மேலும் உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதற்கு நேரம் கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் சைக்கிளில் பயணம் செய்யும் போதும் மன அழுத்தத்தை குறைக்கிறது, மனதளவிலும், உடல் அளவிலும் உங்களை பலமாக்குகிறது.

ஆரோக்கியமான இதயம்: சைக்கிளிங் செய்வது கார்டியோவாஸ்குலருக்கு நன்மையை கொடுக்கிறது. சைக்கிள் பெடலில் ஒவ்வொரு சுழற்சியும் உங்கள் இரத்தத்தை பம்பிங் செய்யும். இதன் விளைவாக உடலில் கலோரியை எரிகிறது, உங்கள் இதயத்தை நிலையான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. இது உங்கள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் உடலை பிரதான நிலையில் வைத்திருக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும்: சைக்கிளிங் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, மனஅழுத்தம் குறைகிறது. இவையனைத்தும் ஒரு நேர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்துகிறது, இது மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. சைக்கிள் ஓட்டுதல் குழந்தைகளில் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது, அதேசமயம் மூத்த வயதினரிடையே ஏற்படும் நினைவாற்றல் சரிவு ஏற்படுவதை குறைக்கிறது.

வயதான தோற்றத்தை தடுக்கிறது: சைக்கிளிங் தொடர்ந்து செய்வது வயதான தோற்றத்தை தடுக்கிறது. விரைவில் வயதான தோற்றம் நேரிடுவதிலில் இருந்து பாதுகாக்க சைக்கிளிங் மிகவும் பயனுள்ளது. உடலில் உள்ள செல்களை எல்லாவற்றிற்கும் புத்துயிர் அளிப்பதை உணரச்செய்யும்.

எடையை குறைக்க மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது: இதுஒரு வெளிப்படையாக உணரும் பயனாகும். சைக்கிளிங் உங்கள் இரத்தத்தை ‘பம்பிங்’ செய்வதன் மூலம் விரைவான மற்றும் பயனுள்ள எடை இழப்புக்கு வழிவகுக்கும், கலோரிகளை எரிக்கும். அடிவயிற்று மற்றும் கால் தசைகள் சைக்கிள் ஓட்டுதல் மூலம் வலுப்பெறும். தொடர்ந்து சைக்கிளிங் செய்துவந்தால் இதனை நீங்களே உணரலாம்.

உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு நல்லது: அடிவயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலுவாக இருப்பது உங்களுடைய பாலியல் உடலுறவுக்கு மிகவும் முக்கியமானது. சைக்கிளிங் செய்வதால் உங்களுடைய அடிவயிற்றில் உள்ள தசைகள் வலுவாகிறது. தொடர்ந்து சைக்கிளிங் செய்வது இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களால் நம்பமுடியாத முக்கிய தசைகள் மேம்படுவதால் பாலியல் உறவில் ஒரு மிகவும் நேரடியான நன்மைகளை கொடுக்கிறது. ஒரு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை உங்கள் மனநிலைக்கு ஒரு ஊக்கத்தை அளிப்பதோடு உடல் ரீதியிலும் மனநிறைவை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவுகிறது: அதுயென்ன தூக்கத்திற்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சனை தூக்கமின்மையாகும். வாழ்க்கை சூழ்நிலை, மன இருக்கம் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு தூக்கத்தை இழக்கிறார்கள். நீங்கள் வழக்கமாக சைக்கிளிங் செய்யுங்கள் ஆரோக்கியமான தூக்கத்தை இரவு மேற்கொள்ள உதவியாக இருக்கும். மன அமைதிக்கு மிகவும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சிக்கு செய்யும் சைக்கிள் ஓட்டுதல் மூலம் உங்களுடைய தூக்கத்தை மேம்படுத்தலாம். இவ்வளவு பயனுள்ள சைக்கிளிங் பயிற்சியை தொடர்ந்து செய்ய முற்படுங்கள்… நலமாக வாழுங்கள்…

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %