சிவபக்திக்கு பூம்பாவைச் சிறுமி…! கயிலையே மயிலை; மயிலையே கயிலை…

Read Time:7 Minute, 4 Second
Page Visited: 107
சிவபக்திக்கு பூம்பாவைச் சிறுமி…! கயிலையே மயிலை; மயிலையே கயிலை…

சென்னை என்றாலே மயிலாப்பூர் நினைவுக்கு வராமல் இருக்காது. மயிலை என்றாலே அன்பும் கருணையும் கொண்ட கற்பகாம்பாளும் ஞானமும் முக்தியும் தருகிற கபாலீஸ்வரரும் நினைவுக்கு வருவார்கள். கோவில் சென்றாள் பூம்பாவை எனும் சிறுமியும் நினைவுக்கு வந்து நிற்பாள். உன்னித்து நோக்கினால் ஓராயிரம் பதிலை கொடுக்கும் தலமாகும். அடுக்கடுக்காக கேள்விகளை ஆர்வமுடன் கேட்கும் இயல்பு குழந்தை பருவத்திற்குரியது. என்றும் அகலாத இளமை கொண்ட முருகப்பெருமான் செந்தமிழ் மூதாட்டி ஒளவையிடம் ‘அரியது எது? பெரியது எது? கொடியது எது? இனியது எது?’ என்று வரிசையாக எழுப்பும் வினாக்களுக்கு அருந்தமிழ் அருவியாக பதில்கள் அனைத்தும் பாட்டாகவே ஒளவையிடம் இருந்து வெளிவரும். அந்த வினா விடை அரங்கம் தமிழ் இலக்கியவாணர்கள் அனைவர் நெஞ்சையும் கவர்ந்த அரிய கருத்துப் பெட்டகம் என்றால் மிகையல்ல. `இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் உயர்ந்தது எது’ என்று பட்டியலிடும் ஒளவை, இந்த உலகம் நான்முகன் படைப்பு. நான்முகனோ திருமாலின் உந்தியில் பிறந்தவன் என்று அடிக்கிக்கொண்டே வரும் அந்தப் பாடல்,

பெரிது! பெரிது! புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் வந்தியில் வந்தோன்!
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்!
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்!
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்!
காசமோ புவியிற் சிறு மான்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! என்பதாகும்…

`உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!’ என்பதை ஔவை மட்டுமல்ல, புராண இதிகாசங்களும் இதையே சொல்கின்றன. அடியவர் மேல் அம்மையும் அப்பனும் அளவிடற்கரிய அன்பை செய்த தன்மை புராணங்களில் மிகுந்து காணப்படுகிறது. சிவனடியார்க்கு செய்யும் தொண்டு சிவனுக்கே செய்த தொண்டெனப்படும். இதற்கெல்லாம் அடிப்படை, இறைவனே அடியார் பெருமையை உலகுக்கு உணர்த்த தன் திருவிளையாடல்கள் புரிந்தமை புராணங்களில் காணப்படுகின்றன. அத்தகைய அடியார்களை கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் `அறுபத்துமூவர் விழா’ என்றால் மிகையல்ல.

தொண்டர்கள் பெரியவர்கள் மட்டும் அல்ல. இறைவனை விடவும் சாமர்த்தியசாலிகள் என்கிறார் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்.

தந்தது உன்தன்னை! கொண்டது என்தன்னை!
சங்கரா! ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்!
யாது நீ பெற்றது என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே ஈசா! உடல் இடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைமாறே!

இறைவனிடம் ‘நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து’ பாடுகின்றார் மாணிக்கவாசகர். எம்பெருமானே! உன்னை நான் பெற்றதனால் பேரானந்த பெருவாழ்வு பெற்றேன். ஆனால் ஆண்டவரே! அடியவனாகிய என்னை தாங்கள் எடுத்துக் கொண்டதால் என்ன பலன் பெற்றீர்கள்? நானே சாமர்த்தியசாலி! தாங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள் என்கிறார். மணிவாசகர் பக்தர்கள் பகவானை விட பன்மடங்கு ஆற்றலாளர்கள் என்கிறார்.

சிவபக்திக்கு பூம்பாவைச் சிறுமி.

உலகில் வெல்ல முடியாதது மரணம் என்று சொல்வர். அதை அடியவரான ஞானசம்பந்தப் பெருமான் வென்று காட்டிய இடம் மயிலாப்பூர் தலமாகும். ஞானசம்பந்தருக்கு மணம் முடிப்பதற்காகவே வளர்க்கப்பட்ட பெண் பூம்பாவை பூப்பரிக்க சென்ற போது நாகம் தீண்டி அகால மரணமடைந்தாள். அவளின் தந்தை அவளுக்கான ஈமக் கிரியைகளை செய்து அவளின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு காத்துவந்தார். மயிலாப்பூருக்கு ஞானசம்பந்தர் எழுந்தருளிய தருணம், பூம்பாவாயின் தந்தை அவரிடம் அந்த கலசத்தை ஒப்படைத்து நடந்ததை தெரிவித்தார்.

கண்ணீர் மல்கிய ஞானசம்பந்தர் இறைவனை நோக்கிப் பதிகம் பாடினார். பத்துப் பாடல்கள் கொண்ட அந்தப் பதிகத்தை அவர் முடிக்கும்போது பூம்பாவை மீண்டும் உயிர்பெற்று வந்தாள். `என்னால் மீண்டும் உயிர்பெற்றதால் அவளுக்கு நான் தந்தையாவேன்’ என்று சொல்லி ஞானசம்பந்தப் பெருமான் அவளை ஆசீர்வதித்தார். இன்றும், பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது அறுபத்து மூவர் உற்சவநாளில் அடியாரின் சொல், மரணத்தை வென்ற சம்பவம் `அங்கம்பூம்பாவாய்’ உற்சவமாக நிகழ்த்தப்படுகிறது. அதையடுத்து பூம்பாவை, சிவத்தொண்டில் தன் வாழ்நாளை ஒப்படைத்தாள். பூம்பாவை சிவபக்தியால் மீண்டும் உயிர்த்தெழுந்து, சிவபக்தியுடன் வாழ்ந்தாள். ஒருகட்டத்தில், சிவபதம் அடைந்தாள் என்கிறது திருமயிலை தல புராணம்.! இத்தலம் சென்று ஈசன் கபாலீஸ்வரர் மற்றும் அன்னை கற்பகவல்லியின் அருளுக்கு பிரார்த்தனை செய்வோம்…

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %