வெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்…!

Read Time:6 Minute, 55 Second
Page Visited: 448
வெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்…!

நம்முடைய நீர்மேலாண்மையையும், இயற்கை வளங்களின் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையையும் இன்றைய குடிநீர் பஞ்சம் வெளிச்சம் போட்டி காட்டியிருக்கிறது. ஆனால், நம்முடைய முன்னோர்கள் நீரை சேமிக்கவும், வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கவும் இந்த உலகமே வியக்கும் வகையில் நீர்மேலாண்மையில் சிறந்து விழங்கியுள்ளனர். தாமிரபரணி நீரோட்டம் தாறுமாறாக இருந்ததை ஒழுங்குபடுத்தும் வகையில்தான் முன்னோர்கள் அமைத்துள்ள தடுப்பணைகள், படித்துறைகள், வெள்ளம் அறிவிப்பு மண்டபம், ஆற்றிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுச் செல்ல கால்வாய்கள் வரலாறு பேசுகிறது.

பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களின் குடிநீர், வேளாண் தேவைகளைப் பூர்த்திசெய்து 120 கி.மீ பயணம் மேற்கொண்டு மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு தாமிரபரணியின் படித்துறைகளும், மண்டபங்களும் சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதன்பின்னர் இருக்கும் நீர்மேலாண்மையும் பாடமாகவே அமையும்.

‘திருவாரூர் தேரழகு, பாபநாசம் படியழகு’ என்பார்கள். அதுபோலத்தான் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படுகையில் படியழகை காண கண்கோடி வேண்டும். தாமிரபரணி தலையணையால் தடுக்கப்பட்டாலும், மலையில் இருந்து தனது முழுபலத்தையும் தாமிரபரணி காட்டும் இடம் பாபநாசம்தான். ஆறு ஆர்ப்பரிக்கும் இடம் இதுதான். ஆனால், பாபநாசம் படித்துறைகள் அலுங்காமல், குலுங்காமல் அப்படியே இருக்கின்றன.

தாமிரபரணி கரையிலுள்ள தீர்த்த கட்டங்கள், படித்துறைகள், மண்டபங்கள் எல்லாம் வரலாற்று சிறப்புவாய்ந்தவை. தாமிரபரணி ஆற்றின் நடுவில் அந்த இடத்தில் உள்ள மண்டபங்கள் பல ஆண்டுகளாக வெள்ளத்தைத் தாங்கி நிற்கிறது. குறுக்குத்துறை அருகே உள்ள நொண்டி பாலமும் முருகன் கோவிலில் அருகில் உள்ள நீராழி மண்டமும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நீராழி மண்டபம் தாமிரபரணி ஆற்றில்வெள்ளம் வரும் போதெல்லாம் மூழ்கி விடுகிறது. ஆனாலும் இந்த கட்டிடத்தில் எந்தவொரு பாதிப்பு இல்லை. வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோயில் அருகில் உள்ள குட்டத்துறை தீர்த்தக்கட்டமும் சிறப்பு வாய்ந்தது.

ஆழ்வார்திருநகரியில் ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் தாமிரபரணி ஆற்றின் படித்துறையாக விரிந்து கிடக்கிறது. தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அபாயங்களை அறிவியல்பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதற்கான மண்டபங்களில் ஒன்றுதான் ஆழ்வார் திருநகரி கல் மண்டபம். அதனை சங்கு மண்டபம் என்று அழைக்கிறார்கள். மூன்று பக்கம் திறந்தவெளியுடன் பின் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்டுள்ளது அந்த மண்டபம். பின்பக்க கல்சுவரின் வெளிப்புற உச்சியில் சங்குபோன்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சங்கு மண்டபம்.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்த மாக ஊதப்படும். இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்ந்தார்கள். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமானால் சங்கின் ஒலி நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்துக்கு நீர் வந்துவிட்டது என்றும், கரைகடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்றும் பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

இது கரையோரம் இருக்கும் மக்களுக்கு மட்டுமன்றி, ஊருக்குள் வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை செய்யும் அமைப்பாக இருந்திருக்கிறது. நீர்மட்டம் குறைய குறைய மீண்டும் சங்கு ஒலிக்கத் தொடங்கும். அப்போது மக்கள் அபாய நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என்றும், வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்றும் தெரிந்துகொள்வார்கள். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இதன்மூலம் வெள்ள அபாயம் நீங்கியது என்று அறிந்துகொண்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

கந்த ஒரு நூற்றாண்டாக அந்த அளவுக்கு ஆற்றில் வெள்ளம் வராததால் இப்போது அந்த மண்டபத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து தொன்மையான அந்த மண்டபத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுள்ளது.
தாமிரபரணியில் மேற்கொள்ளப்படும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை எல்லாம் ஆறே அழித்துவிடுகிறது. தமிழனின் அறிவியல் திறம் வாய்ந்த இக்கண்டுபிடிப்பால் பல கிராமங்கள் வெள்ளத்தை திறமையாக கையாண்டிருக்கின்றன.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %