தாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்

Read Time:4 Minute, 52 Second
Page Visited: 200
தாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்

தாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ளது.

புண்ணிய நதியான தாமிரபரணியில் மகாபுஷ்கரம் விழா 2018-ம் ஆண்டு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தாமிரபரணியில் புனித நீராடினர். தற்போது வைகை நதியை பாதுகாக்கும் வகையில் மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் வைகை பெருவிழா ஜூலை 24-ம் தேதி தொடங்கி 12 நாட்கள் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைகையின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வைகை பெருவிழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி மகாபுஷ்கரம் விழா போல், மதுரையில் ஜூலை 24-ம் தேதி வைகை பெருவிழா தொடங்கி 12 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து அகில பாரதிய துறவிகள் சங்கத் துணைத் தலைவரும், வைகை பெருவிழாவின் தலைவருமான தவத்திரு சுவாமி ராமாநந்தா கூறுகையில், ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு மாதம் விசேஷம். காவிரிக்கு ஐப்பசி, தாமிரபரணிக்கு வைகாசி, வைகைக்கு ஆடி மாதம் விசேஷம். ஆடியில் வைகை அம்மனாக மாறுவதாக ஐதீகம். அதனால், ஆடியில் வைகை பெருவிழா நடத்த உள்ளோம். வைகை நதியை மீண்டும் வற்றாத நதியாக உயிர்ப்பிக்கும் நோக்கில் இந்த விழா நடைபெற உள்ளது.

இந்த நதி 258 கி.மீ. பாய்ந்தோடி 5 மாவட்ட மக்களை வாழ்விக்கிறது. சங்கத் தமிழ் புலவர்களால் பாடப்பட்ட பெருமைமிகு நதி. மதுரைக்கு சித்திரைத் திருவிழா போல இந்த வைகை பெருவிழாவும் பிரபலமாகும். இந்த விழா அடுத்த தலைமுறையினரிடம் வைகையை பாதுகாக்கும் எண்ணத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் 12 நாட்கள் நடத்தப்படும். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.

விழா நிகழ்ச்சிகள் ஜூலை 24-ல் தொடங்குகிறது. அன்று துறவியர் மாநாடு, 25-ம் தேதி வருண ஜெபம், மழை வேண்டிய யாகம், 26-ல் சாக்த பெண்கள் மாநாடு, 27-ல் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு, 28-ல் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநாடு, 29-ல் வைணவ மாநாடு, 30-ல் சிவனடியார்கள் மாநாடு, 31-ல் பாரதீய பசு வன பாதுகாப்பு மாநாடு, ஆகஸ்ட் 1-ல் முத்தமிழ் மாநாடு, ஆக.2-ல் நதி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் மாநாடு, ஆக.3-ல் சன்மார்க்க மாநாடு மற்றும் சித்தர்கள் மாநாடு நடக்கிறது. அன்றுதான் ஆடிப்பெருக்கு விழாவும் நடக்கிறது. அந்த விழாவை வைகை நதியில் கொண்டாட உள்ளோம். ஆக. 4-ல் விழா நிறைவடையும். அன்று அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொள்கின்றனர்.

மக்கள் புனித நீரை தெளித்து பூஜைகள் மேற்கொள்ள, புட்டுத் தோப்பு பகுதியில் வைகை நதியில் பிரத்யேகமாக 40-க்கு 60 அடியில் பெரிய குளம் போல் வெட்டியுள்ளோம். அந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு மூல வைகையில் இருந்து கொண்டு வரப்பட்ட நீருடன் 108 புனித நீரை ஊற்றுகிறோம். இந்த விழா நாளில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப் பெருக்கு விழா நடப்பது கூடுதல் விசேஷம். பாரம்பரிய விழாக்களை மீட்டெடுக்கவும், வாழ்வின் ஆதாரமாக இருக்கும் நதிகள் மீது மக்கள் அன்பு செலுத்தவும் இதுபோன்ற வைகை பெருவிழா, புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %