சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 380…! சுவாரசியமான தகவல்கள்

Read Time:10 Minute, 21 Second
Page Visited: 95
சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 380…! சுவாரசியமான தகவல்கள்

கிராமமாக இருந்து பெருநகரமாக (காஸ்மோபாலிடன்) உயர்ந்த சென்னை உருவாகி இன்றுடன் 380 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உருவானது.

ஆங்கிலேயர்களின் இந்திய வணிகத் தலைநகரமாக விளங்கியது சென்னை. பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ற புதுமைகளைத் தாங்கி, தற்போது கம்பீரமாய் நிற்கிறது, வந்தோரை வாழவைக்கும் இம்மாநகரம் சிறுசிறு கிராமங்களாக இருந்ததுதான் தற்போது  இருக்கும் பிரமாண்ட சென்னை மாநகரம்.
சென்னை என்று சொல்லும்போதே நம் மனதில் தோன்றும் பிம்பங்கள் எண்ணிலடங்காதவை.  மிக நீண்ட கடற்கரையை கொண்ட மெரினாவில் தொடங்கி, சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா ஹால் மற்றும் ரிப்பன் பில்டிங் போன்ற பழமையான சிவப்பு நிற கட்டிடங்கள், வானுயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள், நூலகங்கள், மெட்ரோ ரயில் சேவைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், நீதி மன்றங்கள், ஐடி நிறுவனங்கள், வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோவில்கள் வரை சென்னையில் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளமாக உள்ளது.மதம், மொழி, இனம், நாடு என எவ்வித பாகுபாடும், பேதமுமின்றி பலதரப்பட்ட மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சென்னை (Chennai) நிச்சயம் “வந்தோரை வாழவைக்கும்” நகரமாகவே போற்றப்படுகிறது. இத்தகைய பெருமையை கொண்ட சென்னைக்கு இன்றுடன் வயது 380.

கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதலே பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் மிக முக்கியமான வியாபார மையமாகவும், ஆட்சிஅதிகார மையமாகவும் விளங்கியிருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

சென்னை நகரம் 16-ம் நூற்றாண்டுகளில் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இது பெரிய துறைமுக நகரமாகும். ‘பாக்கம்’ என்றால் நீர்நிலைகள் நிறைந்த பகுதி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பாக்கம் என்று முடியும் பல இடங்கள் சென்னப்பட்டினத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகில் உள்ள பொன்னேஸ்வர பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல்வெட்டில் விஜயநகர மன்னன் ஆட்சியின் படையெடுப்புகள், துறைமுக நகரங்கள் குறித்து தெரியவருகிறது.

குறிப்பாக நீலகங்கரையான் பட்டினம் (நீலாங்கரை), ராயபுர பட்டினம் (ராயபுரம்), புதுபட்டினம், சதுரவான் பட்டினம் (சதுரங்கப்பட்டினம்), கச்சிராயபட்டினம் என பல பட்டினங்கள் நிறைந்த பகுதிகளில் புகழ்மிக்க துறைமுகங்கள் இருந்தது கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது வியப்பாக உள்ளது. சென்னப்பட்டினம் தான் மதராசபட்டினம் என்று மாறி தற்போது சென்னையாக உருவெடுத்துள்ளது. கல்வெட்டுகளில் ஆயம் என்று வரிவசூல் எவ்வாறு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னப்பட்டிணம் பெயர்க்காரணம்…

சென்னை முதலில் சென்னப்பட்டிணம் என்ற சிறிய கிராமமாக சென்னை பிரிந்து கிடந்துள்ளது. 1639 -ம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22-ம் நாள் அந்தக் கிராமம் சென்னப்பட்டிணமாக முதல்முறை உதயமானது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் தங்களது வியாபார உதவியாளரான பெரிதிம்மப்பா மூலமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளடக்கிய கடலோர மீனவ கிராமங்களை விலைக்கு வாங்கினர்.

அந்த இடத்தை தங்களுக்கு விற்ற ஐயப்பன், வேங்கடப்பன் என்போரது தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரது நினைவாக கோட்டைக்கு வடக்கே இருந்த ஊர் சென்னப்பட்டிணம் என்று அப்போது அழைக்கப்பட்டது. சென்னையின் பெயர்க்காரணத்திற்கு மற்றொரு கதையும் உண்டு. சென்னையில் தற்போதைய உயர்நீதிமன்ற கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்திருக்கிறது. அதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் மருவியதாகவும் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்ததின் பின்பு தான் அதையொட்டிய கிராமங்கள் அனைத்தும் வியாபார நிமித்தமாக ஒன்றுடன் ஒன்று இணைந்தும், இணைக்கப்பட்டும் இன்றைய பெருநகர சென்னையின் தோற்றம் அன்றே சிறிது சிறிதாகப் புலனாகத் தொடங்கியது.

சென்னை 1688-ம் ஆண்டு முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை என்ற புகழ் சென்னைக்கு கிடைத்தது. 1746-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.அதன்பிறகு, 1749-ம் ஆண்டு இவைகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின்னர்தான், சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சியடைய தொடங்கியது.

இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
சென்னப்பட்டிணம், மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்ற பெயரை தாண்டியே சென்னை என அழைக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக சென்னை அமைந்தது. 1956-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் ‘காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது.

அதிகாரப் பூர்வ பெயர் அறிவிப்பு!

மதராஸ் என்பதை மெட்ராஸ் என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை கலைஞர் கருணாநிதி தாம் முதல்வராக இருந்த காலத்தில் 17/7/1996-ம் ஆண்டில் சென்னை என ஒரே அதிகாரப் பூர்வப் பெயராக மாற்றம் செய்து அறிவித்தார். அது முதல் மெட்ராஸ் என்ற பெயர் பேச்சு வழக்கில் மட்டுமே நிலைத்து அனைத்து ஆவணங்களிலும் சென்னை என்ற பெயர் வழங்கி வருகிறது.

சென்னைக்கு, சென்னை எனப் பெயர் வந்ததற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்ட போதும் மதராஸப்பட்டிணம் என்ற பெயர்க்காரணம் வந்தமை குறித்த தெளிவான காரணங்கள் அறியப்படவில்லை. அதில் குழப்பங்கள் நிலவுகின்றன. சிலர் வங்கக் கடல் பகுதியில் சிறிய மணல்திட்டாக இருந்த சில கிராமங்களை ஒன்றிணைத்து சென்னப்பட்டிணம் உருவான போது அதற்கு குறிப்பிடத்தக்க பெயர்கள் இல்லாமல் மேட்டில் இருந்த நகரம் எனும் பொருள் கொள்ளும்படியாக மேடு ராச பட்டிணம் என்ற பெயர் வழங்கி வந்து காலப்போக்கில் அது மருவி முத்துராசப் பட்டிணமாகி பின்பு மதராஸப்பட்டிணம் என்று மாறியதாக கூறுகிறார்கள்.

தற்போது இந்தியாவின் 4ஆவது பெரியநகரமாகவும் உலக அளவில் முக்கியமான மாநகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழும் சென்னை மாநகரம் இன்று தனது 380வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %