178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் திவால்… இந்திய சுற்றுலாவிற்கு பின்னடைவு

Read Time:6 Minute, 9 Second

உலகின் மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனமான தாமஸ் குக் திவாலானது. இதனால் இந்திய சுற்றுலாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பிரிட்டிஷ் நிறுவனமான தாமஸ் குக் இன்று (செப்டம்பர் 23) திவால் ஆனது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தாமஸ் குக் மூலம் 1881-ம் ஆண்டில் தாமஸ் குக் நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனம் வெறும் விமானங்களை மட்டும் இயக்காமல், சுற்றுலா செல்பவர்கள் பயனடையும் வகையில் உணவகங்கள், சிறப்பு விடுதிகளையும் இணைத்து இயங்கியது.

1896ல் முதன்முதலாக ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான பயணிகள் ஏஜென்ட்டாக அதிகாரபூர்வ நியமனத்தை பெற்றது. 1927-ல் தான் தனது விமானப் பயணத்தை தொடங்கியது. சிகாகோவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிக்கு நியூயார்க்கிலிருந்து 6 பேரை அழைத்து சென்று ஓட்டலில் தங்கவைத்து பத்திரமாக திரும்ப அழைத்து வந்தது. இதனையடுத்து சுற்றுலாப் பயண ஏற்பாட்டில் மிக முக்கியமான ஒரு இடத்தை இந்நிறுவனம் பிடித்தது.

அதனை தொடர்ந்து இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய சுற்றுலாப் பயண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடன் பெற்று மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது. ஆனால், தற்போது உடனடியாக கடனை திருப்பிக்கட்ட வங்கிகள் வற்புறுத்தியதை அடுத்து ஏராளமான கடன் பிரச்சினையால் தத்தளித்தது.

கடனை அடைக்க பல்வேறு இடங்களில் நிதி திரட்டும் பணிகளில் தாமஸ் குக் ஈடுபட்டது. ஆனால் போதிய அளவுக்கு நிதி சேராத நிலையில் கடன்காரர்களுக்கு பதில்சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவித்தது. இதனையடுத்து நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் குக் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உலகெங்கும் சென்றுள்ள 1,50,000 பயணிகள் வீடு திரும்புவது தற்போது சிக்கலாகியது. அது மட்டுமின்றி அதன் ஏராளமான நிர்வாக அலுவலகங்களும் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் 600 பயண ஏற்பாட்டு அலுவலகங்களைக்கொண்ட இந்த சுற்றுலா நிறுவனத்தில் மொத்தம் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பீட்டர் ஃபங்க்ஹவுசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாதங்களாக பெரும் முயற்சிகள் மற்றும் சமீபத்திய நாட்களில் மேலும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், எங்கள் வணிகத்தை காப்பாற்ற ஒரு ஒப்பந்தத்தை எங்களால் பெற முடியவில்லை. இந்த விளைவு பலருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதையும், கவலை, மன அழுத்தம் மற்றும் இடையூறு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.” என்று கூறியுள்ளார்.

இந்திய சுற்றுலாவுக்கு பாதிப்பு

உலகின் மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனமான தாமஸ் குக் திவாலானது, இந்திய சுற்றுலாவிற்கு பெரும் பின்னடைவாகியுள்ளது. தாமஸ் குக் கடந்த 25-30 ஆண்டுகளாக கோவாவில் செயல்பட்டு வருகிறது. ரஷ்யர்களுக்கு அடுத்தபடியாக கோவாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை பட்டியலில் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 2018-ம் ஆண்டில் விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட 1.48 லட்சம் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் கோவா வந்துள்ளனர். அக்டோபர் முதல் மார்ச் வரையில் இங்கிலாந்தை தளமையமாக கொண்ட தாமஸ் குக் பட்டியலிட்ட விமானங்கள் ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 2,000 சுற்றுலாப் பயணிகளை கோவாவுக்கு அழைத்து வந்துள்ளது.

கோவா சுற்றுலா சங்கத்தின் தலைவர் சவியோ மெசியாஸின் பேசுகையில், “தாமஸ் குக் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும். பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளை கொண்டு வரும் நிறுவனம். பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகள், ஓட்டல் துறையினரால் மிகவும் நேசிக்கப்படுகிறார்கள். தாமஸ் குக் கடந்த 25-30 ஆண்டுகளாக கோவாவில் செயல்பட்டு வருகிறது. தாமஸ் குக்கை இழப்பது கோவா சுற்றுலாவுக்கு பெரிய அடியாகும்,” எனக் கூறியுள்ளார்.

இனி, பல ஓட்டல்கள் கோவாவில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும், ஏனென்றால் அவர்கள் தங்குமிடத்தை நிரப்புவதற்கு தாமஸ் குக்கை முழுமையாக நம்பியிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். “பல ஓட்டல்கள் முற்றிலும் தாமஸ் குக்கை நம்பியிருந்தன. அவை, மிகச்சிறந்த உறவை ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் அதே ஓட்டல்களுக்கு வருவார்கள். இது ஒரு நல்ல வணிகமாகும், இப்போது இதனை நாங்கள் இழக்கப் போகிறோம்” என்று மெசியாஸ் கூறியுள்ளார்.