50 ஆண்டுகளுக்கு பின்னர் களம்… பா.ஜனதாவிற்கு சவாலாகுமா சிவசேனா?

Read Time:7 Minute, 37 Second

மராட்டிய மாநில முதல்வர் பதவிக்கு அடிபோடும் சிவசேனா பிரம்மாஸ்திரமாக ஆதித்ய தாக்கரேவை களமிறக்கியுள்ளது.

மகாராட்டியத்தில் 1966-ம் ஆண்டு சிவசேனா பால் தாக்கரேவால் தொடங்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் மராட்டியம் மராட்டியர்களுக்கேயென பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக இனவெறியை வெளிப்படுத்தி ஆரம்பக்கட்டத்தில் அரசியல் செய்தது. பா.ஜனதாவுடன் எப்போதும் தோள் கொடுத்து நிற்கும் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும் ஆட்சி அரியணையில் ஏறமுடியவில்லை. ஆரம்பக்கட்ட கொள்கையிலிருந்து விலகி இந்துத்துவா கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் பா.ஜனதாவிற்கு அடுத்தப்படியாக பெரிய இந்துத்துவா கட்சியாக இருப்பது சிவசேனாதான். ஆரம்பம் முதலே பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா, பா.ஜனதா எங்களை பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டுகிறது. மத்தியில் பா.ஜனதா ஆதிக்கம் செலுத்தும்போது, மராட்டியத்தில் சிவசேனாவிடம் ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால், பா.ஜனதாவும் எளிதாக விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. 25 ஆண்டுகால நட்புக்கட்சியாக இருந்தாலும் தாம்தான் முதன்மை என்பதில் பா.ஜனதா அதிகாரம் செலுத்துகிறது. சிவசேனாவின் ஆட்சி அதிகார ஆசையால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 2014 மராட்டிய சட்டசபைத் தேர்தலில் முறிந்தது.

பா.ஜனதா மொத்தம் உள்ள 288 தொகுதிகளில்122 தொகுதிகளில் வென்றது. சிவசேனாவுக்கு 63 தொகுதிகள்தான் கிடைத்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பா.ஜனதா தன்னுடைய கூட்டணியில் சிவசேனாவை இணைத்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியை தனதாக்கியது. மீண்டும் சட்டசபை தேர்தலில் குளறுபடி ஆரம்பித்தது.

அக்டோபர் 21-ந் தேதி நடைபெறும் மராட்டிய சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக இரு கட்சிகளும் அறிவித்தன. ஆனால் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது, முதல்-மந்திரி பதவியை தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அமித்ஷாவுடன் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரமாண்ட வெற்றியும் மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவு ரத்து நடவடிக்கையும் செல்வாக்கு உயர்ந்து இருப்பதாக பா.ஜனதா கருதுகிறது.

இதனால் சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்பியது. இதன் காரணமாக இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி தொடர்ந்தது. இறுதியில் 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டது. 135 தொகுதிகள் வரை கேட்ட சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிட சம்மதித்துக்கொண்டது. இருப்பினும் முதல்வர் பதவியை அடைய மறைமுகமாக காய் நகர்த்த தொடங்கியுள்ளது. சிவசேனா ஆதித்ய தாக்கரேவை களமிறக்கியுள்ளது.

ஆட்சி கட்டிலை பிடிப்பதில் முதல் முறையாக சிவசேனா தனது வியூகத்தை மாற்றி அமைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தேர்தல் களத்தில் பதவியை குறிவைத்து களமிறக்கியுள்ளது. ராட்டியத்தில் சிவசேனா கட்சியின் நிறுவன தலைவரான மறைந்த பால் தாக்கரே ஆட்சியை தீர்மானிக்கும் அளவிற்கு ஆளுமையுடன் விளங்கினாரே தவிர தேர்தலில் போட்டியிடவில்லை. இதேபோன்று, அவரது மகன் உத்தவ் தாக்கரேவும் தேர்தலில் களமிறங்கவில்லை.

இப்போது ஆதித்ய தாக்கரேவை ஓர்லி தொகுதியில் சிவசேனா களமிறக்கியுள்ளது. முதல்வர் ஆதித்ய போட்டியிலும் இருப்பதாக கருதப்படுவதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. பா.ஜனதாவின் அதிவேக வளர்ச்சியில் சிவசேனா சிக்குவதை தடுக்கும் வகையில் ஆதித்ய தாக்கரே களமிறக்கப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையான கருத்தாக இருக்கிறது.

ஆதித்ய தாக்கரேவின் வருகை சிவசேனாவை வலுப்படுத்தும் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது. இந்துத்துவா மட்டுமின்றி மராட்டியம் மராட்டியருக்கே என்பதில் வலுக்காட்டும் சிவசேனாவிற்கு மாநில மக்களின் ஆதரவும், இளைஞர்களின் ஆதரவும் கிடைக்கும் என பார்க்கப்படுகிறது.
ஆதித்ய தாக்கரே களமிறக்கப்பட்டது சிவசேனா தொண்டர்களுக்கு புது ஊக்கத்தை கொடுத்துள்ளது. அவர்கள் தீவிரமாக தேர்தல் பணியை செய்கிறார்கள். 124 தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் தொண்டர்களின் பணியிருந்து வருகிறது.

மராட்டியத்தில் போட்டியிடும் 124 தொகுதிகளில் அதிகமாக கவனம் செலுத்தி வெற்றியை தனதாக்கும் போது முதல்வர் பதவியை கேட்க வேண்டும் என சிவசேனா திட்டமிட்டுள்ளது. ஓர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரே வேட்பமனுத் தாக்கல் செய்கையில், என்னுடைய திட்டம் எல்லாம் புதிய மராட்டியத்தை உருவாக்குவதுதான். மக்களின் அன்பை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிகாரத்திற்காக பணியாற்றவில்லை என்றார்.

ஆனாலும், மராட்டியம் மற்றும் தேசத்திற்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் ஒரு சாதாரண மனிதர்தான் என்று நான் நினைக்கிறேன், நானும் ஒரு சாதாரண மனிதன்தான் என்று அவர் கூறியது முதல்வர் போட்டியில் தானும் இருப்பதை மறைமுகமாக குறிப்பிட்டு காட்டியுள்ளார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் வியூகத்திற்கு மத்தியில் சிவசேனாவின் வியூகம் வெற்றிப்பெறுமா? என்பது போக போகதான் தெரியவரும்.