ரபேல் விமானங்கள் இந்திய வானில் பறப்பது எப்போது? விமானப்படை தளபதி தகவல்

Read Time:3 Minute, 46 Second

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரபேல் விமானங்கள் இந்திய வானில் எப்போது பறக்கும் என்பது தொடர்பாக விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா பதில் அளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்தது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கையும், தரையில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்சில் வருகிற 8-ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்திய வானில் ரபேல் விமானங்கள் பறக்கப்போவது எப்போது? என்ற எதிர்பார்ப்பும் இந்தியர்கள் மத்தியில் பெரிதும் உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா,

ரபேல் விமானத்தை முறைப்படி ஒப்படைக்கும் முன்னதாக விமானப்படையின் ஆய்வுக்குழு கடந்த மாதம் சென்று அனைத்து பூர்வாங்க பணிகளையும் முடித்துவிட்டது. ஆவணங்கள் மாற்றம் விஷயத்திலும் விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த வாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குகிறது.

முதலாவதாக 4 விமானங்கள் வரும் 2020 மே மாதத்தில்தான் இந்தியாவுக்கு வருகிறது. அதற்கு பின்னர் இந்திய வானில் ரபேல் விமானங்கள் பறப்பதை காண முடியும். அதுவரையில், நம்முடைய விமானிகள் அந்த விமானத்தை ஓட்டி பயிற்சி பெறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை தனியாக வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியது.

ஆனால் இதனை ராகேஷ் குமார் சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அப்படியொரு திட்டமில்லை. 114 போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்றார். மேலும், அதிகமாக விபத்துக்குள் சிக்கும் மிக்-21 ரக பைஸன் விமானங்கள் விரைவில் மாற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக்-21 ரக பைஸன் விமானங்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதத்துக்குள் படிப்படியாக மாற்றப்படும். அதன் தொழில்நுட்பங்கள் பழமையடைந்துவிட்டதால் அவை மாற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளர்.

இந்தியாவின் முதல் ரபேல் விமானத்தில் இடம் பெற்றிருக்கும் RB-01 குறியீட்டின் பொருள்…