அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளிகளில் படிக்கின்றனர்? விவரங்களை பதிவேற்ற அரசு உத்தரவு

Read Time:5 Minute, 21 Second

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளிகளில் படிக்கின்றனர்? என்ற விவரங்களை கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்த பெற்றோர் முதலாம் உலகப்போர் முடிந்த அமைதியிலும், ஆறாம் வகுப்பு சேர்த்த பெற்றோர் இரண்டாம் உலகப்போர் முடிந்த மகிழ்ச்சியிலும் பணத்தை பலி கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்கி விட்டனர் என்றால் மிகையாகாது. ஒரு காலத்தில் எதுவெல்லாம் இலவசமாக வழங்கப்பட்டனவோ அவை எல்லாம் இன்று விலை கொடுத்து, கடன் பட்டு அடைய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தானமாக கருதப்பட்ட கல்வி இன்று பல கோடிகள் புழங்கும் தொழிலாக மாறிவிட்டது. தனியார் பள்ளிகள் அசுரவேகமாக வளர்ச்சிக்கானம் நிலையில் அரசு பள்ளிகள் காற்று வாங்கிக்கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய குழந்தைகளை பிரபலமான கல்வி நிறுவனங்களில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே, அவர்களுடைய கற்பித்தல் திறனை கேள்விக்குள்ளாக்குகிறது. இதுதொடர்பான விமர்சனங்களும் இருந்து வருகிறது.

இதில் ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்லிவிட முடியாது. தங்களுடைய சொந்த காசால் மாணவர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி சிறப்பான கல்வியை வழங்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் அக்கறையால் சில அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளி மாணவர்களே விரும்பிவரும் செய்திகளையும் நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், அரசு ஆசிரியர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக அதிரடியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.  
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்(இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயவிவரங்களும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் சுயவிவரங்களும் பதிவு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயவிவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் சுயவிவரங்களையும் பதிவு செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதையும் ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.

மேலும், பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களையும் பதிவு செய்யவும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?, அரசு பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா? போன்ற விவரங்களை அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்ய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வித்துறை தரப்பில் இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இதற்காக கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகள் விவரங்கள் என்ற  தனிப்பகுதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.அந்த பிரிவில், பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கவில்லை என்றால், எந்த தனியார் பள்ளியில் படிக்கிறாரோ? அந்த விவரங்களை அதன் கீழே கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை அரசு ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து அரசு ஊழியர்களுக்குமே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.