அதிகாலை 3 மணியளவில் வெட்டப்பட்ட 800 மரங்கள்…! கண்ணீர் சிந்தும் மக்கள்…! ஆரே காலனியில் நடப்பது என்ன?

Read Time:4 Minute, 34 Second

உலகமே வெப்பமையமாதலக்கு இறையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என இயற்கை வல்லுநர்கள் எச்சரிக்கும் நிலையில், மரங்கள் மட்டுமே நம்மை பாதுகாக்கும் கேடயமாக நம்முன்னால் இருக்கிறது. ஆனால், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் முதலில் வெட்டப்படுவது வானுயர வளர்ந்த நூற்றாண்டை கடந்த மரங்கள்தான். காட்டழிப்பும் கவலையின்றி செல்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மும்பையில் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மும்பையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கிருக்கும் சில மரங்களுக்குமே ஆபத்து கழுத்துவரையில் சென்றுக்கொண்டிருக்கிறது.

கோரேகாவில் உள்ள ஆரே காலனி மும்பை பெருநகரின் பசுமை நுரையீரலாக உள்ளது. இங்கு மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்கு 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மரங்களை மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்களை கொல்லாதீர்கள் என்ற பாதகையுடன் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரி தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், நேற்று (அக்டோபர் 4) ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க முடியாது என்றும், மரங்களை வெட்ட மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மாநகராட்சி அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் அந்த நான்கு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த பிரச்சினை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் கூறியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல பலரும் திட்டமிட்டனர். 2,656 மரங்களை காப்பாற்ற மக்கள் ஒருபுறம் போராட, அரசோ அதிகாலை மூன்று மணியளவில் மக்கள் அயர்ந்து தூங்கும் போது போலீஸ் உதவியுடன் மரங்களை அதிநவீன இயந்திரங்களை கொண்டு அறுத்து தள்ளியுள்ளது. நேற்று மாலை வரையில் உயிருட்டன் பார்த்த மரங்கள் பசுமை மாறாது மடிந்து கிடந்தது பொதுமக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அவர்கள் பலரும் மரங்களை கட்டிப்பிடித்து அழும் காட்சி பலருடைய நெஞ்சையும் உடைய செய்தது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் வழக்கம்போல் கைது நடவடிக்கையையும், வழக்குப்பதிவையும் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பலரும் மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரக்கம் எதுவுமின்று சுமார் 800 மரங்கள் சில மணிநேரங்களில் அறுத்து தள்ளப்பட்டுள்ளது என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் ஆரே பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். #AareyForest, #SaveAareyForest போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மரங்களை வெட்ட வேண்டாம் என கெஞ்சிய மக்களை, காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ மற்றும் இரவில் அவசரமாக மரங்கள் வெட்டும் வீடியோ போன்றவை வைரலாகி சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.