உங்கள் நம்பிக்கையே, உங்களுக்கான இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லும்… இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

Read Time:9 Minute, 18 Second

சில நேரங்களில், நீங்கள் துடிப்புடன் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தால், அதை ஒரு மலையின் உச்சியின் மீது வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்களை சுற்றி யார், உங்களுக்காக உதவ யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது, நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள், உங்களை எவ்வளவு நம்புகிறீர்கள் என்பதுதான் இலக்கை அடைய முக்கியம். இதில் வேறொன்றும் தேவையில்லை. உங்கள் நம்பிக்கை மட்டும் போதும். அதுவே உங்களுக்கான இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லும்

என்கிறார் இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ்…

இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் எண்ணிலடங்காத திறமைகள் கொட்டிக்கிடக்கிறது. அவை அங்கீகரிக்கப்படுவதில்தான் பல்வேறு தடைகள் இருக்கிறது. திறமையிருந்தாலும், போதி அங்கீகாரமின்மை, ஊக்குவிப்பின்மை, தாழ்வுமனப்பான்மை அனைத்தும் கிராமபுறங்களிலும், பின்தங்கிய பகுதியிலிருந்து வரும் திறமையான மாணவர்களையும், இளைஞர்களையும் மீண்டும் பின்னுக்கு தள்ளுகிறது. அல்லது பெரும் போராட்டங்கள், சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள செய்கிறது. கல்வி, விளையாட்டு என எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவில் இதுதான். இதில் வெற்றியடைந்தவர்களைவிட இலக்கு பாதையிலிருந்து விலகிய கொடுமையை செய்தவர்கள்தான் அதிகமாகும்.

மிகவும் பின்தங்கிய பகுதியில் இருந்துவந்து, தன்னுடைய உறுதியான மனத்தால் இன்று உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக ஜொலிக்கிறார் இந்தியாவின் தடகளத் துறை நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ். சமீபத்தில் செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றது உட்பட தனது தங்க வேட்டையை தொடர்ந்து வருகிறார் ஹிமா தாஸ். விளையாட்டுத்துறையின் மீதான ஆர்வம் மேகங்களை கிழித்துக்கொண்டு வெளிவரும் மின்னலை போன்று பிரகாசமாக இருக்கிறது.

இன்று இந்தியர்களால் தடகளத்துறை கொண்டாடப்படும் வீராங்கனையாக மாறியுள்ள ஹிமா தாஸ் தன்னுடைய வாழ்கையில் சந்தித்தவையை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் தடகளத்துறையில் தான் சாதிப்பதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை Humans of Bombay என்ற பிரபல பேஸ்புக் பக்கத்தில் ஹிமா தாஸ் பகிர்ந்துள்ளார். சாதனைகள் யாவும், ஏதோ ஒரு புறக்கணிப்பிலிருந்துதான் தொடங்குகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் பல்வேறு வலிகளும் வேதனைகளும் நிரம்பிக்கிடக்கின்றன. அப்படித்தான் பல தடைகளை தாண்டி முன்னேறியிருக்கிறார் ஹிமா தாஸ்.

ஹிமா தாஸ் கூறியிருப்பதாவது:- என்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவருமே விவசாயிகள். சூழ்நிலைகளால் அவருடைய கனவுகளை தொடர முடியவில்லை. எங்களுடையது குடும்பம் கூட்டுக்குடும்பம். போதிய பணம் இல்லாத காரணத்தால் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு எங்கள் அடிப்படை தேவைகளை சுருக்கிக்கொண்டோம். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என்பதுதான் என்னிடம் என்னுடைய பெற்றோர்கள் கூறியது.

நான் குழந்தையாக இருக்கும்போது விளையாட்டில் எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. குறிப்பாக, கால்பந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்காலத்தில் என் அப்பாவுக்கும் கால்பந்து மீதான ஆர்வம் இருந்தது. போதுமான பணம் இல்லாத காரணத்தால் அவரால் விளையாட்டை தொடரமுடியவில்லை. ஆனால், என்னுடைய ஆர்வத்திற்கு மதிப்புக்கொடுக்க தவர் தவறவில்லை. என்னுடைய விளையாட்டு மீதான ஆசைக்கு அவரால் முடிந்த அளவு எனக்கு உதவி செய்தார். காலணி வாங்க கூட எங்களிடம் பணம் இருந்தது இல்லை. பயிற்சி செய்ய மைதானமும் கிடையாது, வயல்வெளிதான் எனக்கான பயிற்சி மைதானம். ஒருநாள், நான் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்ததை என் உடற்கல்வி ஆசிரியர் பார்த்தார். என்னுடைய ஓட்டத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டவர், என்னிடம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினார்.

நான் இருக்கும் நிலைமை காரணமாக மற்றவர்களை ஒப்பிட்டு என்னை தாழ்த்திக்கொண்டிருந்தேன். ஆனால், மாவட்ட அளவிலான போட்டியில் வென்றபோது, என்னுடைய சந்தேகங்களுக்கெல்லாம் தீர்வு கிடைத்தது. பின்னர் எனக்குப் பயிற்சியாளர்கள் கிடைத்தார்கள். அதற்குப்பிறகு, நான் அஸ்ஸாமில் பயிற்சி முகாமில் சேர்ந்தேன். அந்தப் பயிற்சியாளர்கள், என்னுடைய தங்கும் செலவுகளை பார்த்துக்கொண்டனர். அப்போது, எனக்கு 17 வயதிருக்கும். தனியாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அப்போது என்னுடைய அப்பா பேசியது, `இந்தச் சிறு மாற்றங்கள்தான் உன்னுடைய குறிக்கோளை அடைய உதவிபுரியும். ஒருநாள் நீ இந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அது எல்லாவற்றிற்கும் தகுதியானதாக இருந்திருக்கும்’ என்பதாகும். நான் கேம்ப்புக்கு சென்றேன். அப்போது, என்னுடைய வழக்கமான செயல்பாடுகள் சற்று கடினமாக இருந்தன. அதிகாலையில் எழுந்து, சில மணி நேரம் பயிற்சி, மீண்டும் மாலையில் பயிற்சி என்றபடியே என்னுடைய நாள்கள் கழிந்தது. என் வீட்டையும், இயற்கையான சூழலையும் இழந்தேன்.

இந்தக் கடுமையான உழைப்பின் பலனாகத்தான் ஏசியன் யூத் சாம்பியக்‌ஷிப்பில் 7-வது இடத்தை பிடித்தேன். `வேர்ல்டு யூத் சாம்பியனில்’ 5-வது இடத்துக்கு முன்னேறினேன். இந்த போட்டிகளுக்கு எல்லாம் நான் உலகம் முழுவதும் தனியாக விமானத்தில் பயணம்செய்து கொண்டிருந்தேன். தடைகளை தாண்டி, லட்சியத்தை அடைந்தேன். ஆசியப் போட்டிகள் மற்றும் `ஐஏஏஎஃப் வேர்ல்டு யூ20 சாம்பியன்ஷிப்’ போட்டிகளில் முதல் இந்தியராக தங்கம் வென்றேன். வாழ்க்கை நிறைய மாற்றங்களை கொடுத்தது; குறுகிய காலத்திலேயே இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்ந்தன.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் நான் விளையாடப்போகிறேன் என்று அறிவிக்கப்பட்டபோது, என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை. இருப்பினும், அவர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். என்னை டி.வி -யில் பார்க்க உற்சாகமாக இருந்தார்கள். இன்று, குடியரசுத்தலைவர் கையால் நான் அர்ஜுனா விருது வாங்கியிருக்கிறேன். இந்தியாவுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சில நேரங்களில், நீங்கள் துடிப்புடன் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை ஒரு மலையின் உச்சியில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்களைச் சுற்றி யார், உங்களுக்காக உதவ யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள், நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள், உங்களை எவ்வளவு நம்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். வேறொன்றும் தேவையில்லை. உங்கள் நம்பிக்கை மட்டும் போதும். அதுவே உங்களுக்கான இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லும்” என்கிறார் ஹிமா தாஸ்.