இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரெயில் சேவை தொடங்கியது…!

Read Time:5 Minute, 27 Second

நாட்டில் தனியார் மூலம் முதன்முதலாக இயக்கப்படும் லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (அக்டோபர்-4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் லக்னோவில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து லக்னோவுக்கும் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் முதல் தனியார் பயணிகள் ரெயிலாகும். இந்த ரெயிலின் வெற்றியை பொறுத்து அடுத்துவரும் காலங்களில் அதிகமான தனியார் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. லக்னோ ரெயில் நிலையத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்

முழுவதும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் ரெயிலில் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ், சேர்கார் இருக்கைகள் உள்ளன. எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 56 பயணிகளும், சேர்கார் பெட்டியில் 78 பயணிகளும் பயணிக்க முடியும். ரெயலில் சொகுசு வசதிகளான இருக்கை முன் எல்சிடி தொலைக்காட்சி, படிக்கும் மின்விளக்குகள், செல்போன் சார்ஜ் வசதி, கண்காணிப்பு கேமிரா, காபி, தேநீர் வழங்கும் எந்திரம், விமானத்தில் வழங்கப்படுவதுபோல உயர்தர சுவையான காலை, மாலை சிற்றுண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில்களில் வேகமானதாக கருதப்படும் ஸ்வார்ன் சதாப்தி ரெயிலைவிட இதன் பயண நேரம் குறைவு என இந்திய ரயில்வே கூறியுள்ளது. ரெயில் சேவையை தொடங்கி வைத்து ஆதித்யநாத், “இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரெயில் இது. இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு வாழ்த்துகள். இதேபோல், நாட்டின் மற்ற நகரங்களை இணைக்கும் முயற்சியும் விரைவில் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின்படி வாரநாள்களில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து 6 நாள்கள் இந்த ரெயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ரெயில் சேவை தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் `ரெயில் தாமதமாக வந்தால் ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்கும். அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரூ.100 வழங்கப்படும். அதேசமயம், குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக ரெயில் வந்தால் பயணிகளுக்கு ரூ.250 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாக இயக்குநர் எம்.பி மால் `பிசினஸ்லைன்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளோம். பயணிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கான காப்பீட்டை இலவசமாக வழங்கவுள்ளோம். அதேபோன்று ரெயிலில் எடுத்து செல்லப்படும் பொருள்கள் திருடு போனாலும் ரூபாய் ஒரு லட்சம் வரை இழப்பீடு பெற்று கொள்ளலாம். பயணிகளுக்கான சீட்டை நாங்கள் வழங்குவோம். வருமானத்தையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம்.

பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றால் நாங்கள் இழப்பை சந்திக்க நேரிடும். அதேநேரத்தில் பயண கட்டணத்தை நிர்ணயம் செய்யும் சுதந்திரம் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான சேவைகளையும் நாங்கள் முடிவு செய்யலாம். வரும் காலங்களில் பல புதிய சேவைகளை வழங்கும் திட்டம் உள்ளது. குறிப்பாக, பயணிகளின் லக்கேஜ்களை வீட்டுக்கே சென்று பெறும் திட்டம் முதலியவை பரிசீலனையில் இருக்கின்றது,” என்று கூறியுள்ளார்.

எப்போது வேண்டுமென்றாலும் பயண கட்டணத்தை மாற்றும் உரிமை தனியாரிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. வழங்கும் சலுகைகளை பொறுத்து கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி இந்த இரு ரெயில் சேவைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இதிலிருந்து ரெயில்வேக்கு செலுத்த வேண்டிய கட்டணம் போக ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ஆண்டுக்கு 4 முதல் 5 கோடி ருபாய் வரை வருமானம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.