காஷ்மீர் விவகாரத்தில்: எந்த நாடுகள் உங்களுக்கு ஆதரவு?.. பதிலளிக்க முடியாமல் ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்…!

Read Time:3 Minute, 33 Second

காஷ்மீர் விவகாரத்தில் எந்த நாடுகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவு? என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி ஓட்டம் பிடித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கியதற்கு பாகிஸ்தான் எதிர்த்தது. காஷ்மீர் விவகாரத்தில் 58 நாடுகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து பேசினார். ஐ.நா.விலும் இதே அடித்துவிட்டார். ஏற்கனவே இம்ரான் கான் மானத்தை செப்டம்பரில் அந்நாட்டு உள்துறை மந்திரி இஜாஸ் அகமது ஷா வாங்கிவிட்டார். ஆனாலும், இம்ரான் அடங்கவில்லை ஐ.நா.விலும் பொய்களை உரைத்தார்.

இஜாஸ் அகமது ஷா பேசுகையில், “உலக நாடுகள் இந்தியாவைத்தான் நம்புகிறது. பாகிஸ்தானை இடையாது. சர்வதேச சமூகத்திடம் இருந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானால் ஆதரவை பெற முடியவில்லை,” என்றார். இப்போது 58 நாடுகள் ஆதரவு விவகாரத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி குரேஷி பதிலளிக்கமுடியாமல் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட ஆதரவு கரம் நீட்டவில்லை. ஆனால் 58 நாடுகள் ஆதரவு என பாகிஸ்தான் கூறிவருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் 58 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கின்றன என்று இம்ரான் கான் பேசிவரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது குரேஷி ஓட்டம் பிடித்துள்ளார். அந்நாட்டின் எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்து குரேஷி பேசியுள்ளார். அப்போது பேட்டியெடுத்து செய்தியாளர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவாக இருப்பதாக இம்ரான் கான் கூறிவருகிறார். எந்த நாடுகள் எல்லாம் நமக்கு ஆதரவாக உள்ளது என்பதை சொல்ல முடியுமா? என்று கேள்வியை எழுப்பினார்.

இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த குரேஷி, “யாருடைய தூண்டுதல் காரணமாக இதுபோன்ற கேள்வியை கேட்கிறீர்கள்,” என்று காட்டமாக கூறியுள்ளார். பின்னர் குரேஷியும் 58 நாடுகள் ஆதரவாக இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டதை எடுத்துக்காட்டி செய்தியாளரும் கேள்வியை தொடர்ந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சம் சென்ற குரேஷி, “நான், அப்படி செய்திருக்க வாய்ப்பே கிடையாது. நான் என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் யார் தூண்டுதலின் பேரில் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது” என்று பேட்டியை முடித்துக்கொண்டு வேகமாக ஓடிவிட்டார்.