ரூ.150 கோடிக்கும் அதிகமான வருமானம்…! ரூ. 30 கோடி பறிமுதல்…! அதிரவைக்கும் நாமக்கல் நீட் பயிற்சி மைய ரெய்டு

Read Time:7 Minute, 52 Second

நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நீட் பயிற்சி மையங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ரூ. 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் தகுதியில்லாதவர்கள் சேர்வதை தடுக்கும் என மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை கொண்டுவந்தது. கிராமங்கள், நகரங்களில் மாணவர்களுக்கு சமமான கல்வி, வசதியை கொடுக்கமுடியாமல் அரசு நீட் தேர்வை நடத்துவது ஏன்? என்ற விமர்சனங்கள் ஒருபகுதியில் இருக்க, தேர்வுகளுக்கு பயிற்சியென புற்றீசல் போன்று பயிற்சி மையங்கள் முளைத்தன. ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரையில் கோடிகள் புரளும் இடமாக பயிற்சி மையங்கள் உருவாக தொடங்கியது. நீட் தேர்வுக்கு முன்னதாக கல்வியை விற்பனை செய்வதில் சிறப்பாக விளங்கிய நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளால், நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டது. பள்ளிகளில் குறைந்த வருமானங்களை பயிற்சி மையங்களில் சரிசெய்ய அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது.

இப்போது, தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் பூதகரமாகி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மோசடி கும்பலின் நெட்வோர்க் இந்தியா முழுவதும் பரவியுள்ளது, மத்திய அரசின் நோக்கத்தை நீட் நிறைவேற்றுமா? என்ற பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைசங்கிலி தொடர்போல் தொடர்கையில் மற்றொரு மோசடி வெளியாகியுள்ளது. அதாவது, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மாணவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்தான் வெளியே தெரியவந்துள்ளது. நீட் தேர்வின் மூலமாக தனியார் மருத்துவ கல்லூரிகளின் அராஜக போக்கு மாறும் என கூறப்ப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கான தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்களும், பெற்றோர்களும் எண்ணிலடங்காத வண்ணம் சிக்கினர். இதனால் மாணவர்களுக்கு லாபம் கிடைத்ததோ என்னவே, மாலை நேர வகுப்பு என பயிற்சி மையங்களை தொடங்கிய தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் லாபம்தான்.

இந்தியா முழுவதும் உள்ள 529 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சீட் எண்ணிக்கை 70,978 ஆகும். 2019-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்க்கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாகும். இதில் 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். 70,978 இடங்களில் நமக்கும் இடம் கிடைக்கும் என போட்டியில் கலந்துக்கொண்டு எத்தனை பேர் எத்தனை லட்சம் பயிற்சி மையங்களுக்கு செலவு செய்தார்களோ? அதில் எத்தனை பேர் மறு தேர்வுக்கு பணம் கட்டி படித்தார்களோ? யோசிக்க முடியாத அளவிற்கு பயிற்சி மையங்களில் பணம் புரள்வதை இதுவே உறுதிசெய்யும். இப்போது, இதுபோன்ற ஒரு மோசடியும் தமிழகத்திலிருந்துதான் வெளியாகியுள்ளது.

ரூ.150 கோடி…

நாமக்கல் போதுபட்டியில் உள்ள கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சங்கள் கட்டணமாக பெறுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர். பள்ளி, நீட் பயிற்சி மையம், அவைகளின் தாளாளர் மற்றும் இயக்குநர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வருமான வரித்துறைக்கு புகார் சென்றதையடுத்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரியவந்துள்ளது.

பள்ளியின் மெயின் கேட் உள்ளிட்ட அனைத்து கேட்களும் பூட்டப்பட்டு நேற்றிலிருந்து(அக்டோபர் 11) சோதனை நடக்கிறது. பள்ளித் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுக்க உள்ள முக்கிய வி.ஐ.பி.களின் மகள், மகன்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமாகப் பணம் கைமாறியுள்ளதாகவும், நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சம் வரை மாணவர்களிடம் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. தனியாக நீட் பயிற்சி மையத்துடன் இந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல்லில் செயல்படும் நீட் தேர்வு பயிற்சி மையம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உள்ள 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது. நீட் தேர்வு பயிற்சிக்காக மாணவர்களிடமிருந்து பெறப்படும் பணத்தை உரிய முறையில் கணக்கு காட்டாமல் வருமானத்தை மறைத்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் இருந்த அறை ஒன்றின் லாக்கரில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 30 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல், சட்டவிரோத வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், தனிப்பட்ட முதலீடுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக அதிக ஊதியத்துக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கான ஊதியமும் முறையான பதிவுகள் ஏதும் இல்லாமல் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெயரில் வங்கி லாக்கர்களில் பணம் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் நிறுவனத்தின் பினாமியாக செயல்பட்டிருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூபாய் 150 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பான சோதனை மற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது அதிர்ச்சிகரமான தகவல்கள் மேலும் வெளியாகும் என்பதில் ஐயம் கிடையாது….! ஒரு பயிற்சி மையத்திலே இவ்வளவு தொகை மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மையங்களில் எவ்வளவு மோசடி நடைபெற்று இருக்கும் என்பதை யோசிக்கவே அச்சப்படும் நிலையாக உள்ளது.