மலைக்க வைக்கும் மாமல்லபுரம்… பூர்ண பௌர்ணமியில் ஒரு அழகோவியம்…!

Read Time:10 Minute, 32 Second

வாழ்வில் உன்னதம் என்று சொல்லத்தக்க பல நிமிடங்கள் பல சமயங்களில் நம்மையறியாமலே நம்மிடம் வந்து சென்றிருக்கும். இதில் முக்கியமானவை வரலாற்று சிறப்புவாய்ந்த சிற்பங்களாகும். சிற்பங்களை ரசிக்காது செல்ல முடியாது. கல்லிலே கலை வண்ணம் கண்டார் என்பது மாமல்லபுரத்திற்கு பொருந்தும். தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமாக இருக்கும் மாமல்லபுரத்திற்கு நம்மில் எத்தனைபேர் சென்றோம் என்று நமக்கே தெரிந்த பதிலாகும். மாமல்லபுரத்தில் ராஜசிம்ம பல்லவன் கட்டிய கடல் மல்லை கடற்கோவில் காணக்காண தெவிட்டாது கண்களுக்கு இனிய விருந்தாகும். மாமல்லபுரத்தில் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்து ரசிக்க வேண்டும். இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பை அடுத்து மாமல்லபுரம் குறித்தான ஆர்வம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஒட்டிக்கொண்டது என்பது நாம் நேரில் பார்க்க கூடிய உண்மையாகும். இந்த சந்திப்புக்கு பின்னர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் குறித்து பள்ளி காலங்களில் அதிகமாக படித்திருப்போம், சுற்றுலா சென்றிருந்தால் உள்ளார்ந்த அனுபவமின்றி மேலோட்டமாக பார்த்துவந்திருக்கலாம். எனவே, மாமல்லபுரம் குறித்தான தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்களை பார்க்கலாம்.

மாமல்லபுரம் பெயர் காரணம்

கடந்த 7-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில், முக்கிய துறைமுகமாக மாமல்லபுரமும், தலைநகராக காஞ்சிபுரமும் விளங்கியது.

நரசிம்ம வர்ம பல்லவன் மிகச் சிறந்த மல்லன், மல்லர்களில் மகா மல்லன் (மற்போர் புரிபவர்கள்) ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் தோள் வலிமை கொண்டு போரிடுவோர் மல்லர்கள் (மல்யுத்தம்) என்பதே சாலப் பொருந்தும். நரசிம்ம வர்மன் மாமல்லன் என்று அழைக்கப்பட்டார். அவர், வாழ்ந்த காலம் கி.பி 634 முதல் கி.பி.670 வரையாகும். நரசிம்ம வர்மன் காலத்தில்தான் எண்ணிலடங்காத திருப்பணி நடந்துள்ளது. அவரது காலத்தில் ஐந்து ரதங்கள் திருப்பணி ஆனது. கடற்கோவில் அவனது பேரன் ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்ம வர்மன்) காலத்தைய திருப்பணியாகும்.

முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின் அரியணை ஏறிய முதலாம் நரசிம்ம பல்லவனின் பட்டப் பெயரே மாமல்லன் அவரது பெயரை போற்றும்வகையில் பிற்காலத்தில் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம், மகாபலிபுரம் என்றும் மக்களால் அழைக்கப்பட்டது.

சிற்பங்கள்

பாறைகளை குடைந்து குடைவரை கோவில்கள் கட்டப்பட்டது, கட்டடக்கலைக்கும், சிற்ப சித்திரங்களுக்கும் சவால் விடுவதாக அமைந்துள்ளது.

மாமல்லபுரத்தில் சிம்ம ரூபங்கள் சிற்பங்களாக வேறெங்கேயும் விட இங்கே கனத்த கம்பீரம் காட்டுகின்றன. யானைகள் நிஜ யானைகளைக் காட்டிலும் அழகாக காட்சியளிக்கிறது. யாளிகளும் அப்படிதான். ஐந்து ரதங்கள் ஒற்றை கல்லால் செதுக்கப்பட்ட கற்கோவில் வடிவங்கள் ரம்மியம். இவையனைத்தும் பல்லவர் காலக் கட்டிடக்கலைக்கு பிரமிப்பூட்டும் உதாரணங்களாய் அன்றும் …இன்றும்… இனி என்றென்றும் தன்னிகரிலாதவையாக இருக்கும். தர்ம ராஜரதத்தில் செதுக்கப்பட்ட சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் கோவில் சிற்பக்கலைக்கு பெருமைக்குரிய ஒன்றென அங்கிருக்கும் குறிப்புகள் குறிப்பிடுகிறது.

ஐந்து ரதங்களுமே விமானங்கள் அமைப்பில் மாறுபடுகின்றன. ஒற்றைக்கல் யானை, ஒற்றைக்கல் சிம்மம் என பிரமிப்பில் ஆழ்த்துகிறது பல்லவப்படைப்புகள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், ராஜ சிம்மன் எழுப்பிய புலிக்குகை, இப்படி நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பங்கள் அங்கு நிறையவே உள்ளன. சிற்பங்கள் பற்றி பேசவேண்டுமென்றால் அதிகமாகவே உள்ளது. அங்கு சென்று பார்த்து ரசித்துக்கொள்ளலாம்.

கடற்கரைக் கோவில்

மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று கோவில்கள் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. அவற்றில் இரண்டு கோவில்கள் ஆழிப் பேரலையின் கோரப்பசிக்கு ஆளாயியுள்ளது. எஞ்சிய ஒரு கோவிலே தற்சமயம் நமக்கு காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2004-இல் ஏற்பட்ட சுனாமியில் இந்த கடற்கரை கோவிலின் அமைப்பில் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும். கடற்கரை கோவிலை கடல்நீர் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பெரிய பாறாங்கற்களை பாதுகாப்பு வேலியாக கொட்டி இந்திய தொல்பொருள்துறை பராமரித்து வருகிறது. மல்லையில் மொத்தம் மூன்று விதமான கட்டிடப் பாணிகள் காணப்படுகிறது. ஒன்று ஒற்றைக்கல் கோவில் மாதிரிகள் (உதாரணம்-பஞ்ச பாண்டவர் ரதம்). இரண்டாம் வகை குடவரை கோவில்கள் (உதாரணம்-ராமானுஜ மண்டபம்). மூன்றாவது கற்றளிகள் கல்லால் கட்டப்பட்ட கோயில்கள். கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டும் முறையாகும். உதாரணம்-கடற்கோயில்) கடற்கரை கோவில் உலக அளவில் ஒரு தலை சிறந்த பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதால் 1984-ல் உலக பண்பாட்டுச் சின்னம் என யுனெஸ்கோ அறிவித்தது.

இங்குள்ள அனைத்து கற்சிற்பங்களையும், கடற்கரைக் கோவில் போன்ற வரலாற்று சின்னங்களையும் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் மூலம் நேரடி கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள நிலமங்கை உடனுறை ஸ்தல சயன பெருமாள் கோவில் முக்கிய வழிபாட்டுத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வர் இங்கு அவதரித்துள்ளார்.

சிற்பக்கலைக் கல்லூரி

இங்கு கற்சிற்பங்களை உருவாக்கும் அரசு சிற்பக்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல் சிற்பம், சுதை சிற்பம், உலோக சிற்பம், மரச்சிற்பம், வண்ணச் சிற்பம், கோயில் கட்டடக்கலை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு ஆகியவை இக்கல்லூரியில் நடத்தப்படுகின்றன. கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தவர் தலை சிறந்த சிற்பியும், இக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான கணபதி சிற்பியாவார்.

பேருந்து நிலையத்தின் அருகிலேயே அரசு கல்லூரி அருங்காட்சியகம் இருக்கிறது, இரண்டு ரூபாய் டிக்கட்டில் உள்ளே போய் பார்க்கலாம். சிலம்பேந்திய கண்ணகியுடன், புலியை முறத்தால் அடித்து துரத்திய வீரத்தமிழ் தாயொருத்தி சிற்பமாய் நிற்கிறாள், விரிகுழல் ஓவியம் போல் சிதறிப் பறக்க தூக்கிய பாதங்களுடன் சதிராடும் நடராஜ விக்கிரகங்கள் சிலைகளாய், ரதி மதன் ரூபங்கள் சிலைகளாய், ஆலிலை கிருஷ்ண விக்கிரகம் சிலையாய், பல்லவ காலப் பெண்கள் சிலைகளாய், பருத்த பானை வயிற்றோடு வினாயகப் பெருமானார். எல்லாவற்றுக்கும் நட்ட நடுவில் மாமல்லன் சிலை, உயரமான கறுத்த வழ வழப்பான கற்சிலை எனச் சொல்லிக்கொண்டு போகலாம்.

பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, நந்திக் கலம்பகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களில் மகாபலிபுரம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை ஜனவரி மாதத்திலும், நாட்டிய விழாவை டிசம்பர் மாதத்திலும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு சென்னை- புதுச்சேரி-கல்பாக்கம்- செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன.

பூர்ண பௌர்ணமி

மாமல்லபுரத்தில் எந்த சிற்பத்தைக் கண்டாலும், அதனை தொட்டு பார்க்கையிலும், ஒருநொடி அங்கு நிற்கையிலும், புகைப்படம் எடுத்துக் கொள்கையிலும் இங்கே எப்போது எந்த பல்லவ மன்னன், எந்த பல்லவ இளவரசி ஓர் நொடி நின்றிருக்க கூடுமோ எனும் ஆச்சர்யம் கலந்த உவகையில் பெருமிதம் நிறைய செய்கிறது. நீலக்கடலும் பால் நுரைப்பூக்களாய் பொங்கிப் பிரவாகித்து பின்னர் அமிழும் அலையோடும் கரையும், கரை நின்று கால் நனைக்கும் மனித முகங்களுமாய் மாமல்லபுரம் பல்லவர் பெருமை பல்லாண்டுகளாய் பேசுகிறது.
பூர்ண பௌர்ணமியில் கடற்கோவிலை காண்பது என்பது அழகோவியம். விடுமுறை என்றால் குழந்தைகளை அழைத்து கொண்டு போய் காண்பியுங்கள் சிற்பங்களையும், பல்லவ பூமியையும். மல்லைக்குப் புறப்பட்டால் கேமரா இல்லாமல் போகாதீர்கள்…!