‘நீட்’ முறியடிப்பு; ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ரூ. 60 லட்சத்திற்கு விற்பனை…!

Read Time:6 Minute, 17 Second

மருத்துவ கல்லூரிகளில் மோசடிகளை தடுக்கும் வகையில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்தேர்விலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறியுள்ளது தொடர்ந்து வெளியாகி வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், பயிற்சி மையங்களில் மோசடி என அடுக்கடுக்கான மோசடிகளுக்கு மத்தியில் மற்றொரு புதுவிதமான மோசடி கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியாகியுள்ளது. நீட் தேர்வு தடைகளையும் முறியடித்து தனியார் கல்லூரிகள் ஒரு மருத்துவ கல்லூரி சீட்டை ரூ. 60 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முழு விபரம்:-

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ தேவராஜ் உர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, மற்றும் ஆர்.எல். ஜலாப்பா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய நான்கு மருத்துவ கல்லூரிகளில் அக்டோபர் 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
முதல் இரண்டு கல்லூரிகளை ஸ்ரீ சித்தார்த்தா கல்வி அறக்கட்டளை நடத்துகிறது. இதில், காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வரா பிரதான அறங்காவலராக உள்ளார். மற்ற இரண்டு கல்லூரிகளையும் மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜலாப்பா நடத்துகிறார்.

கர்நாடகாவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் வருமான வரித்துறை நான்கு கல்லூரிகள் உட்பட 32 இடங்களில் சோதனைகளை நடத்தியது. அக்டோபர் 10-ம் தேதி வருமான வரித்துறை இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வருமான வரித்துறை சோதனையின் போது மருத்துவ ஆலோசனை குழுவின் விதிமுறைகளின்படி மருத்துவப்படிக்கான சீட் முதலில் மெரிட் அடிப்படையில் வந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், அங்கு சேர்ந்த மாணவர்கள் விலகியதும் சீட் அப்படியே நிர்வாகத்தின் இட ஒதுக்கீட்டுக்கு சென்றுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் சோதனைகளை மேற்பார்வையிட்ட ஒரு மூத்த அதிகாரி என்.டி.டி.விக்கு அளித்துள்ள பேட்டியில், கணக்கிடப்படாத ரொக்கமாக ரூ. 4.22 கோடி பறிமுதல் செய்துள்ளோம், எம்பிபிஎஸ் இடங்கள் தகுதியற்ற வேட்பாளர்களுக்கு ஒரு சீட் ரூ .50 முதல் 60 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன, எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் பெயர் குறிப்பிட வேண்டாம் என அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் பேசுகையில் மோசடி எப்படி நடந்தது என்பதை விளக்கமாக கூறியுள்ளார். அதாவது, மருத்துவ கல்லூரிகள் மற்றும் தரகர்கள் அடங்கிய ஒரு பெரிய நெட்வொர்க் இந்த மாணவ சேர்க்கை மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பணத்தின் மீது ஆசை காட்டி ஈர்த்துள்ளனர். அவர்களை மீண்டும் நீட் தேர்வை எழுதச் செய்துள்ளனர். அவர்களை கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரியில் சீட் முன்னதாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை முடியும் கடைசி தருவாயில் அவர்கள் வெளியேறிவிடுவார்கள். பின்னர் அவர்கள் பெயரில் முன்பதிவான சீட்கள் காலியாகும். இந்த இடங்கள் விதிமுறைகளின்படி கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடுகிறது. இந்த இடங்களை தகுதியற்ற மாணவர்களுக்கு லட்சங்களை வாங்கி கல்லூரி நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணையும் தொடர்கிறது.

விசாரணையின் போது மோசடியில் ஈடுபட்ட முகவர்கள் விற்பனை செய்யும் இடங்களை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர், தரகர்கள் சாட்சிகளாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுபோன்ற பணத்தை திசைதிருப்ப கூட்டாளிகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்தமாக இதுவரை கண்டறியப்படாத மொத்த வருமானம் ரூ .100 கோடி ஆகும். இது, 185 இடங்களுக்கு பெறப்பட்ட ரொக்க நன்கொடைகளை கருத்தில் கொண்டு சராசரியாக ரூ .50 லட்சம் முதல் ரூ .65 லட்சம் வரை சீட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிதெரியவராத சொத்துக்கள் மொத்தமாக ரூ .8.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் சிபிடிடி (மத்திய நேரடி வரி வாரியம்) க்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், பின்னர் சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) போன்ற பிற விசாரணை நிறுவனங்களுக்கு அடுத்த நடவடிக்கைக்கு அனுப்பப்படும்,” சோதனைகளை மேற்பார்வையிட்ட மூத்த அதிகாரி கூறியுள்ளார்.