இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சப்-கலெக்டர் ஆனார்!

Read Time:4 Minute, 1 Second

இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்று திறனாளி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரஞ்சல் பாட்டீல் சப்-கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார்.

திருவனந்தபுரத்தின் முன்னாள் சார் ஆட்சியர் பி கோபாலகிருஷ்ணனிடமிருந்து பொறுப்புகளை பிரஞ்சல் பாட்டீல் பெற்றுக்கொண்டார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரஞ்சல் கண் பார்வையில்லாதவர். இந்திய குடிப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்து சிறப்பாக படித்து ரேங்கிங் பெற்றவர். 2018-ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் பணியில் சேர்ந்தார். முதற்கட்ட பயிற்சிக்கு பிறகு எர்ணாகுளத்தில் உதவி ஆட்சித்தலைவராக பிரஞ்சல் பொறுப்பேற்றுக்கொண்டார். தனக்கான உண்மையான தேர்வு இப்போதுதான் தொடங்குகிறது என்று பிரஞ்சல் கூறியிருந்தார்.

இப்போது பிரஞ்சல் பாட்டீல் திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார்.

சார் ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரஞ்சல் பாட்டீல், நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது. நம்பிக்கையை ஒருபோதும் இழக்க கூடாது. நாம் எப்போதும் நமது முயற்சிகளால், எதை விரும்புகிறோமோ அதை அடைய முடியும். நான் சிறுவயதிலேயே பார்வையை இழந்தபோதிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றுதான் விரும்பினேன். இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு இந்த வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்.

நான் பணியாற்ற தொடங்கியபிறகுதான் மாவட்டத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும், அதற்காக சிறப்பாக திட்டமிடுவேன். எனது சக ஊழியர்கள் மற்றும் திருவனந்தபுரம் மக்களிடமிருந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

மாட்டிய மாநிலம் உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த பாட்டீல், தனது ஆறு வயதில் கண் பார்வையை இழந்தார். இருப்பினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். பாட்டீல் 2016-ம் ஆண்டில் தனது முதல் முயற்சியில் சிவில் சர்வீசஸில் 733-வது இடத்தையும், அடுத்த ஆண்டு 124 வது இடத்தையும் பிடித்தார்.

முதலில் தேர்வில் வெற்றிப்பெற்ற போது இந்திய ரயில்வே கணக்கு சேவைப் பிரிவில் பிரஞ்சலுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது பார்வை குறைபாட்டை காரணம் காட்டி பணி வழங்க ரெயில்வே மறுத்துவிட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு பேட்டியளிக்கையில், ”இரண்டாம் முறை குடிப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்து, அதற்கான முதல்நிலை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், எனக்கு பணி வழங்க ரெயில்வே மறுத்த விஷயம் தெரியவந்தது.

இதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றேன். இதனால், இந்திய தபால் துறையில் எனக்கு பணி ஒதுக்கினார்கள். இந்நிலையில், இரண்டாம் முறை தேர்வு எழுதிய நான் 124 வது இடத்தை பெற்றேன். எனக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டது” என்றார். அவரைய வெற்றியும், சேவையும் தொடர வாழ்த்துவோம்.