‘ப்ரீ கேஜி’ குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு கூடாது – என்சிஇஆர்டி உத்தரவு

Read Time:6 Minute, 18 Second

‘ப்ரீ கேஜி’ பள்ளிகளில் பயிலும் எந்த குழந்தைக்கும் எழுத்து மற்றும் குரல்வழித் தேர்வு (ஓரல் டெஸ்ட்) நடத்தக்கூடாது என தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அசுரவேகத்தில் வளர்ந்துவரும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதற்குகூட தேர்வுகள் நடத்தப்படும் சூழல் நிலவுகிறது. குழந்தைகள் விளையாட்டை மறந்து பெற்றோர்களால் கல்வி கற்பிக்கப்படும் அவலம் நிலவுகிறது. குழந்தைகளை 2 வயதுக்கு முன்னதாகவே தனியார் பள்ளிகளின் நுழைவு தேர்வுக்கு தயார் படுத்தும் கொடூரமும் இங்குதான் உள்ளது. இந்நிலையில், ‘ப்ரீ கேஜி’ பள்ளிகளில் பயிலும் எந்த குழந்தைக்கும் எழுத்து மற்றும் குரல்வழித் தேர்வு (ஓரல் டெஸ்ட்) நடத்தக்கூடாது என தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தெரிவித்துள்ளது.

இதனை தனியார் பள்ளிகள் செயல்படுத்துமோ, இல்லையோ இதுதொடர்பான தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவிப்பை பார்க்கலாம். மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில், சிபிஎஸ்இக்கு பாடத்திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த கவுன்சில், ப்ரீ கேஜி பள்ளிக்கல்வி குறித்தும், பள்ளிகள் எவ்வாறு குழந்தைகளை மதிப்பிட வேண்டும், வழிநடத்த வேண்டும், எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ப்ரீ கேஜி பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு அல்லது குரல்வழித் தேர்வை நடத்தக்கூடாது. ப்ரீ கேஜி பள்ளி குழந்தைகளை மதிப்பிடுவதன் நோக்கம் என்பது அவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் அல்லது தேர்ச்சி பெறவில்லை என்று அடையாளமிடுவது கிடையாது. அவ்வாறு குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர்கள் (பாஸ்), தேர்ச்சி பெறாதவர்கள் (ஃபெயில்) என்று மதிப்பிடுவது விரும்பத்தகாதது செயலாகும். அது, பெற்றோர்களின் ஆர்வத்தை திசை திருப்பிவிடும்.

ப்ரீ கேஜி, கிண்டர் கார்டன் பள்ளிகள் தங்களிடம் பயிலும் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி குறித்து தொடர்ச்சியாக மதிப்பிடுவது அவசியமாகும். அந்த மதிப்பீடுகள் பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை கொண்டிருக்க வேண்டும். அதாவது, குழந்தைகள் பேசுதல், ஒரு குழந்தை மற்ற குழந்தையிடம் எவ்வாறு பேசுகிறது, எதில் ஆர்வம் ஆகியவை குறித்து கண்காணித்து மதிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே கண்காணித்து சிறிய அளவிலான குறிப்புகளை எடுக்க வேண்டும். குழந்தை எவ்வாறு நேரத்தை வகுப்பில் செலவிடுகிறது, மற்ற குழந்தையிடம் பழகும் முறை, எவ்வாறு பேசுகிறார்கள், மற்ற குழந்தையிடம் தொடர்புகொள்ள எதை பயன்படுத்துகிறார்கள், குழந்தையின் உடல் நலன், பழக்கம், உணவு முறை ஆகியவற்றை கவனித்து அந்த குறிப்பு எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கோப்பு அல்லது கணினியில் போல்டர் உருவாக்குதல் வேண்டும். குழந்தை குறித்து பெற்றோர் எப்போது அறிய வேண்டும் என்று கேட்டாலும் அவர்கள் குறித்த தகவலை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒருவேளை ப்ரீ கேஜி பள்ளியில் இருந்து அடுத்த கட்டத்துக்கு குழந்தை படிக்க செல்லும்போது அந்தக் குழந்தை குறித்த தகவலை, மதிப்பீடுகளை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ப்ரீ கேஜி பள்ளிகளின் கட்டமைப்பு, பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், குழந்தைகள் சேர்க்கும் முறை, குழந்தைகள் வருகைப் பதிவேடு பராமரித்தல், கண்காணித்தல், மேற்பார்வை செய்தல், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே தொடர்பை உருவாக்குதல் போன்ற வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்சிஇஆர்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ப்ரீ கேஜி பள்ளியில் படிக்கும் எந்த குழந்தைக்கும் எழுத்து அல்லது குரல்வழித் தேர்வை நடத்தக்கூடாது. பாஸ், ஃபெயில் என்று அடையாளமிடுவது மதிப்பிடுதலின் நோக்கம் கிடையாது. ஆனால், தற்போது நம்முடைய நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றுகின்றன. ப்ரீ கேஜி பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை என்பது ஒரேமாதிரியாக, சலிப்பான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆங்கில வழியில் கற்பித்து வீட்டுப்பாடங்களும், தேர்வுகளும் நடத்துகிறார்கள். குழந்தைகளின் விளையாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் விரும்பத்தகாதவை, மோசமான பழக்கமாகும். இதுபோன்ற செயல்கள் பெற்றோர்களின் கவனத்தை திசை திருப்பும்” எனக் கூறியுள்ளார்.