திருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்… சிவனின் சித்தர சபை…!

Read Time:8 Minute, 40 Second
Page Visited: 657
திருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்… சிவனின் சித்தர சபை…!

தமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பீடம் அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையதாகும்.

சிவனை அவமதிக்க நினைத்த தட்சனின் யாகத்தில் விழுந்து தேவி தாட்சாயிணி எரிந்து போகிறாள். மனைவி இறந்த சோகத்தில் சிவன் தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த வேண்டி மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தை விட அது தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தியது பிறகே சிவன் சாந்தமானார். அவ்வாறு வெட்டப்பட்ட தாட்சாயிணியின் உடல் துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடமாக உருவாயின. அதுபோல் சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன என்றும் அதனாலேயே அவை 51 அட்சர சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

திருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள் விபரம்…

51 சக்தி பீடங்களில் குற்றாலம் தரணி பீடமும் ஒன்று. குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின் சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக அமைந்துள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயமாகும். இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள். இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது. மலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும் திகழும் சிறப்பை கொண்டவள். திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.

திருக்குற்றாலம் முதலில் விஷ்ணு தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக உருப்பெற்றது என்பர். அவ்வாறு அவர் சிவத்தலமாக மாற்றியபோது, சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பர். இங்கே பராசக்தி, ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்ற நம்பிக்கை நிலவுவதால் இந்த பீடத்துக்கு, தரணி பீடம் (தரணி, பூமி) என்று பெயர் ஏற்பட்டது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக நம்பிக்கையாகும். எனவே, பெளர்ணமியன்று இரவில் நவசக்தி பூஜை இங்கே நடத்தப்படுகிறது.

பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பெளர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும். இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நம் பிரார்த்தனைகள் பலிக்கும். இந்த பீடத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதை மெய்ப்பிக்கிறது. ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடிய தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 13-வது தலமாகத் திகழ்கிறது.

ஐப்பசி மாத பூர நட்சத்தித்தில் நடைபெறும் திருக்கல்யாண விழாவன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நிதிக்கு அருகே எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தருள்கின்றனர். குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு திருப்பெயர்களின் அழைக்கப்படுகின்றார். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் ஈசன். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி, ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள். பிராகார வலம் வரும்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படும் பராசக்தி பீடத்தை தரிசிக்கலாம். தலதீர்த்தங்களாக சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை விளங்குகின்றன.

தலவிருட்சம், குறும்பலா. இந்தப் பலா மரத்தில் வருடம் முழுவதும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்தப் பலாவிலுள்ள சுளைகள், லிங்க வடிவிலிருப்பதைப் பார்க்க பரவசமாகிறது. இக்கோயில் சங்கு வடிவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்கு செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பிலிருந்து இதைக் காணலாம். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை இங்கே அமைந்திருக்கிறது என்பது சிறப்பு. குற்றாலநாதர் கோவிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக உள்ளது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் சூழ்ந்திருக்கிறது. மரத்தாலான, அற்புதமான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது இந்த சித்திர சபையில். மரக்கோவிலின் கூரை சிதம்பரத்தை நினைவூட்டுகிறது. இந்த சபையில் இரண்டு மண்டபங்கள். ஒன்றில் நிறைய சாளரங்கள். இதன் நடுவே ஒரு சிறு மேடையை காணலாம்.

திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து காட்சி அருள்கிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புதமான, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் சித்திரங்களில் கண்டு மகிழலாம். கிழக்கு நோக்கியுள்ள சித்திர சபையின் உள்ளேயிருக்கும் நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. ஒருமுறை சென்று சிவசக்தியின் திருவருளை பெற்று வாருங்கள்….

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %