தெரிந்துக்கொள்வோம்… தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

Read Time:13 Minute, 39 Second
Page Visited: 334
தெரிந்துக்கொள்வோம்… தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

கர்நாடகா அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட தடையில்லை என உச்ச நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. தென்பெண்ணையில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகா அரசு பெறவில்லை என்றும் 1892-ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு செயல்பட்டிருந்ததாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவில், தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை. தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றது. ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முழுமையாக பார்க்கலாம்.:-

தென்பெண்ணை

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகும் அதே மலைக்குன்றில் உருவாகும் தென்பெண்ணை ஆறு 430 கி.மீ நீளம் உள்ளது. தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ நீளத்தில் தக்சின பினாகினி எனும் பெயரிலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 180 கி.மீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ நீளத்துக்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ நீளத்துக்கும் பாய்ந்து இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ ஆகும். மார்க்கண்டேய நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இது போக ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நெடுங்கல் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள். தொடர்ந்து கர்நாடக மாநிலக் கழிவுகள் தொழிற்சாலை கழிவுகள் மொத்தம் இந்த ஆற்றில் திறந்து விடப்பட்டு மொத்த கழிவுகளும் ஓசூரில் அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையில் தேங்குகிறது. இதுபோக போதிய மழையில்லாத காரணத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு நீர் வராத நிலையே பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை நீர்மட்டும்தான் செல்கிறது.

மார்க்கண்டேய நதி

தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மார்க்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாக கிருஷ்ணகிரியில் தெண்பெண்ணையாற்றில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் அளிக்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு கடந்த 2012-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மீது விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை கட்ட தடையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அணைதிட்டம் விபரம்

தென்பெண்ணை நீரைப் பயன்படுத்துவதில்1892-ம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நீரை எவ்வாறு பயன்படுத்துவது, கட்டுப்படுத்துவது மற்றும் விநியோகிப்பது என்பதை குறிப்பிடுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் 1933-ல் மாற்றப்பட்டது. மார்க்கண்டேய நதியில் அணைக்கட்டும் கர்நாடகம், மலூர், கோலார் மற்றும் பங்கர்பேட்டை நகரங்கள் மற்றும் ஆற்றின் பாதையில் உள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக என்று கூறுகிறது.

பங்கர்பேட்டை தாலுகாவில் உள்ள யர்கோல் கிராமத்திற்கு அருகிலுள்ள மார்க்கண்டேய அணை திட்டத்திற்கு 2007-ம் ஆண்டில் 240 கோடி ரூபாய் செலவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ .240 கோடியில் 160 கோடி ரூபாயை கர்நாடக அரசு வழங்கும் மற்றும் ரூ .79.92 கோடியை மத்திய அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசு ஆலோசகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, கர்நாடக அரசு 2013-ம் ஆண்டில் கட்டுமானத்தை தொடங்கி 75-80% நிறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ளது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான சர்ச்சை

வழக்குவிசாரணை நடைபெற்ற போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ஆறு அல்ல. இந்த ஆறு தமிழகத்திலும் பெரும்பகுதி ஓடுவதால் கர்நாடகா மாநிலம் இதற்கு முழு உரிமை கோர முடியாது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமான பணிகள் ஆய்வுகள் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு முயற்சிக்கும் கர்நாடகா, குறிப்பாக பெங்களூரு, கோலார் உள்ளிட்ட மாவட்ட குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டுவதாகவும், அதற்கு முழு உரிமை உள்ளது எனவும் இதுதொடர்பாக பிற மாநிலத்திடம் அனுமதி பெறவேண்டியதில்லை எனவும் கூறுவது ஏற்புடையது அல்ல. ஏனெனில் 1892 நீர்பங்கீடு ஒப்பந்த அடிப்படையில் கீழ்ப்பகுதி மாநிலங்களின் அனுமதி பெறாமல் ஆற்றின் குறுக்கே எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது. அதை கர்நாடகா மீறி உள்ளது.

மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், கர்நாடகாவின் திட்டத்துக்கு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் ஒப்புதல் அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிநீர் தேவைக்காக தடுப்பணை கட்டுவதாக அனுமதி பெற்று, ஆற்றின் மொத்த நீரோட்டத்தையும் கர்நாடகா திசைமாற்ற முயற்சிக்கிறது. இந்த கட்டுமானத்தால், தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வறட்சியும், குடிநீர் பஞ்சமும் ஏற்படும். மேலும் கர்நாடகா தொடர்ந்து பெண்ணையாற்றில் கழிவுநீரை விடுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைகிறது. அதை தடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக அரசு 1892 மற்றும் 1933 ஆகிய இரு ஒப்பந்தங்களின் விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் 1933 உடன்படிக்கையின்படி தமிழ்நாட்டின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிட்டது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தென்பெண்ணை ஆற்றில் கா்நாடகம் அணை கட்ட தடையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டும் திட்டம் 75% நிறைவடைந்துள்ளதால், சில ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளதாலும் நீதிமன்றம் தடை விதிக்க உத்தரவிட எந்த காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தமிழகம், தனது மனுவில் கூட இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்க கோரவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

“மத்திய அரசை அணுகி தற்போதைய சர்ச்சையை பரிசீலிக்க மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்க கோரினோம் என்பது தொடர்பான தகவல் தொடர்புகளை சமர்பிக்க நாங்கள் பலமுறை நாபாடேவிடம் கேட்டோம் (தமிழக அரசு வழக்கறிஞர்). அத்தகைய வெளிப்படையான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அரசு தரப்பில் மத்திய அரசு தலையிட கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது,” என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட கட்டத்திலிருந்து இந்த திட்டம் நடந்து வருவதாகவும், 2013 ஆம் ஆண்டில் கட்டுமானத்தை தொடங்கியதிலிருந்தும் சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவால் ஒரு தீர்ப்பாயம் அமைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதிப்பதை தவிர நீதிமன்றத்தால் இப்போது எதுவும் செய்ய முடியாது. இருப்பினும், நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு தலையிட்டு மாநிலங்களுக்கு இடையேயான ஒரு நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தை அமைக்குமாறு தமிழகம் கோரலாம். உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு வேலூா், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை தவிடு பொடியாக்கியுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %