ஆண்டாள் திருப்பாவை – 1 இறைவனை அடைய அழைக்கிறாள் ஆண்டாள்…

மாதங்களில் மகத்தான சிறப்புகளை பெற்று திகழ்வது மார்கழி. அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரமாகும். அந்நேரத்தில் தேவர்கள் அனைவரும் மேலான பரம்பொருளை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். தேவர்கள்தான் பரம்பொருளின் பிரதிநிதிகளாக இருந்து, நமக்கு வேண்டிய நன்மைகளை அருள்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.

மழை வளம், காற்று வளம், மண் வளம் போன்ற உயிர்கள் வாழத்தேவையான அனைத்து நலன்களையும் நமக்கு அருள்பவர்கள். நாம் மார்கழி மாதம் முழுவதும் செய்யும் வழிபாடுகளால் பரம்பொருளையும், பரம்பொருளின் பிரதிநிதிகளான தேவர்களையும் வழிபட்ட பலனைப் பெறுவோம். தமிழ் சமய வரலாற்றில் பாடல் புனைந்து இறைவனை ஏற்றி போற்றிய பெண்கள் இருவர். அவர்கள் சைவ வைணவ சமயங்களுக்கு இரு கண்களாக திகழ்கின்றார்கள். ஒருவர் காரைக்கால் அம்மையார், இன்னொருவர் ஆண்டாள் நாச்சியார். சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை, பாவை நாச்சியார், கோதை நாச்சியார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் சிறப்பு பெற்றவர் ஆண்டாள்.

ஸ்ரீஆண்டாள், திருவல்லிக்கேணி.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இவர், பரமனுக்குப் பூமாலை சூட்டிக்கொடுத்தது மட்டுமின்றி, பாமாலையும் பாடி கொடுத்தார். இரண்டு நூல்களை இவர் அருளியிருக்கிறார். முதலில் அருளியது திருப்பாவை, இரண்டாவது நாச்சியார் திருமொழி. திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் கொண்டவை. ஆகமொத்தம், கோதை நாச்சியார் பாடியதாக 173 பாசுரங்கள் இன்று நமக்கு கிடைக்கின்றன. ‘நாச்சியார் திருமொழி’ ஒரு பெண்ணின் மன உணர்வுகளை முழுமையாக எடுத்துக்காட்ட வல்லது. மார்கழி மாதம் பிறந்து விட்டாலே, மனத்தை மகிழ செய்யும் பாடல்கள் (திருப்பாவை – திருவெம்பாவை) எங்கும் ஒலிக்க கேட்கலாம்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் மண்ணுலக மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், அவர்கள் பரம்பொருளுடன் சங்கமிக்கவும் விரும்பினார். அதற்காகவேதான் பூமிபிராட்டி ஆண்டாளாக அவதரித்தாள். ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அவதரித்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்ட ஆண்டாள் கோபிகைகள் கோகுலத்தில் கிருஷ்ணனை அனுபவித்து பாடியதுபோல், தன்னையும் ஒரு கோபிகையாகவும், மண்ணுலக மக்கள் அனைவரையும் கோபிகைகளாகவும் கருதி அனைவரையும் விரதம் இருந்து ஶ்ரீ கிருஷ்ணனின் புகழைப்பாடி அவன் அருளை பெற அழைக்கிறாள்.

திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் தை பிறந்ததும் அவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கையாகும். இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒரு நாள் திருவரங்கம் கோவிலில் பெருமாளுடன் கலந்து விடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்து கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம், திருப்பாவை.

இங்கே ஆண்டாள் தனக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறவேண்டும் என்பதற்காக பாவை நோன்பு கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இறைவனையே தன் கணவனாக வரித்து விரதம் அனுஷ்டித்தாள். இங்கே ஆண்டாள் ஜீவாத்மா; அவள் வரித்துக்கொண்ட கிருஷ்ணன் பரமாத்மா. எனவேதான் அவள் தான் மட்டும் இறைவனை அடையவேண்டும் என்று எண்ணாமல் உலகத்து மக்கள் அனைவரும் இறைவனை நேசித்தும் பூசித்தும் நிறைவாக இறைவனிடமே சென்று சேரவேண்டும் என்று நினைத்து உலக மக்களாகிய நம்மையெல்லாம் தன்னுடைய தோழிகளாக நினைத்து நம்முடைய மாயையாகிய உறக்கத்தில் இருந்து விடுபட அழைக்கிறாள். இறைவனை அடைய நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் அடுத்து வரும் பாடலில் அழகுற விளக்குகிறாள். ஒவ்வொரு பாடலையும் விரிவாக பார்க்கலாம்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ்ப் படிந்தேல் ஓர் எம்பாவாய்

குறிப்பு

போதுமினோ – விருப்பம் உடையவர்கள்
நேர் – அழகு
இழை – ஆபரணம்
சீர் – செல்வம்
மல்கும் – நிறைந்த
சிறுமீர் – சிறுமிகள்
ஏர் – அழகிய
ஆர்ந்த – நிறைந்த
கண்ணி – மலர்
பறை – நாம் வேண்டிய பொருள்
படிந்தேலோர் – வணங்கிக் கேட்டு நினைவில் நிறுத்தி
(படிந்து+ஏல்+ஓர். ஏல்-கேள், ஓர்-நினைவு)

பொருள்:-

கன்னிப் பெண்கள் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வாய்க்க வேண்டும் என்று பாவை நோன்பு இருக்கும் பழக்கம் சங்க காலத்திலும் இருந்ததாக பல சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன. அவ்வாறான பாவை நோன்பு இருப்பதற்கான காலம் (மார்கழி மாதம்), நோன்பு நோற்கும் தகுதி படைத்தவர்கள் (திருமணம் ஆகாத சிறுமியர்கள்), நோன்பினால் கிடைக்கும் பலன் (வேண்டுவன அனைத்தும் கிட்டுதல்) ஆகியவை இந்த பாசுரத்தின் முதல் பாடலில் உணர்த்தப் படுகின்றன. மார்கழி மாதத்தில், சந்திரன் நிறைந்து காணப்படும் பௌர்ணமி நாளில் நீராட வந்திருக்கும், அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் சிறுமிகளே, சிறப்பு மிகுந்த ஆய்ப்பாடியில் வசிக்கும் செல்வச் சிறுமிகளே, கையினில் கொண்டுள்ள கூரான வேல் கொண்டு பகைவர்களைத் தாக்கி வெற்றி கொள்ளும் நந்தகோபனின் குமாரனும், அழகானை கண்களை உடைய யசோதையின் மகனும், இளம் சிங்கம் போன்று காணப்படுபவனும், கரிய நிறம் படைத்த மேனியை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று ஒளிவீசம் முகத்தினை உடையவனும் ஆகிய, நாராயணின் அம்சமாகிய கண்ணன், நாம் வேண்டுவது அனைத்தும் அளிக்க வல்லவன். உலகத்தார் புகழும் வண்ணம், நீராடிய பின்னர் பாவை நோன்பு நோற்க இருப்பவர்களே வாருங்கள், வாருங்கள் என ஆண்டாள் பிராட்டியார் அழைக்கிறார்.

Next Post

போராட்டங்களில் பொது சொத்துக்கள் அழிப்பு: சட்டம் சொல்வது என்ன? உச்சநீதிமன்ற உத்தரவு என்ன? ஒருபார்வை

Tue Dec 17 , 2019
இந்தியாவில் சொத்துக்களை அழிப்பதற்கு எதிராக ஒரு சட்டம் இருந்தபோதிலும், நாடு முழுவதும் போராட்டங்களின்போது கலவரம், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பொதுவானவையாக உள்ளது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேச மாநில அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு எதிரான மனுக்களை டிசம்பர் 16-ம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, போராட்டங்களில் போது நடைபெற்ற வன்முறைகள் மற்றும் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை