மதுரையில் சாலையோரம் தனியொருவராக 100 மரங்களை வளர்க்கும் முதியவர்…!

Read Time:7 Minute, 51 Second
Page Visited: 97
மதுரையில் சாலையோரம் தனியொருவராக 100  மரங்களை வளர்க்கும் முதியவர்…!

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள வரங்களான தாவரங்களை நாம் முறையாகப் பாதுகாப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக்குடையாக இருப்பவை மரங்கள். தாய்க்கோழி தன்னுடைய குஞ்சுகளை இறக்கைக்கு அடியில் அணைத்துக் கொள்வதைப்போன்று வெயிலுக்கும் மழைக்கும் குடையாக இருந்து அரவணைத்து, உயிர்களை காக்கும் பேரன்பு கொண்டவை மரங்கள்தான். தரணியெங்கும் தாவரங்கள் செழித்தால்தான், மனிதகுலம் மகத்தான வளர்ச்சி அடைய முடியும், உடல் நலத்துடனும் இருக்க முடியும்.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்து சோலைகளாக இருந்த சாலைகளை பாலைவனங்களாக்கி விட்டு, வெயிலில் வாடிக்கொண்டிருக்கிறோம்.
சாலையோரங்களில் அடர்ந்திருக்கும் மரங்களால், வெயிலின் தாக்கம் தெரியாமல் சுகமாக இருந்தன அன்றைய பயணங்கள். ஆனால், இன்றைக்கு நெடுஞ்சாலைகளில் நிழல் தேடி அலைய வேண்டிய அவல நிலைதான் காணப்படுகிறது.

சாலைகளை போடுவதற்காக பலநூறு மரங்கள் வெட்ட திட்டமிடுகிறார்கள். சாலை அமைத்த பின்னர் அதேபோன்று மரங்களை நடவும், பாதுகாக்கவும் முயற்சிகள் எளிதாக நடப்பது கிடையாது. இருப்பினும், மரங்களை வெட்டி சாலை போடக் கூடாது, சாலைக்கும் அருகில்கூட மரங்களை வளர்க்கத்தான் வேண்டுமென்று முதியோர்களால் கற்று கொடுக்கப்பட்ட தலைமுறைகள் நாம். அதன் பயனை மறந்து செயல்படுபவர்களுக்குச் சாலையோரத்தில் அவை இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் ஆயிரம்.

வாகனங்களிலிருந்து வெளியாகும் கரிம வாயுதான் காற்று மாசு மற்றும் உலக வெப்பமயமாதலின் மிக முக்கிய காரணியென்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், கரிம வாயுவை உறிஞ்சிக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கும். கரிம வாயுவை இங்கு மரங்கள் தாமாகவே ஈர்த்துக்கொண்டு நம்மை உடல்நிலை கேடுகளிலிருந்து காப்பாற்றுகின்றன. ஆயிரம் பலன்கள் இருப்பது புரிந்துக்கொண்டு இப்போது மரங்கள் நடுதல் கவனம் பெற்று உள்ளது. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதை மனிதகுலம் உணர தொடங்கியுள்ளது.

மரக்கன்றுகள் நடவு செய்வது, விதைப்பந்து எறிவது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. நாகரிகம் தழைத்த காலத்தில் ஊர்ந்து சென்று, குழுவாக வீடுகள் அமைத்து வாழ்ந்ததால் ஊர்கள் உருவானது. அங்கிருந்து பெரும் குழுக்களாய் நகர்ந்து சென்று குடியிருப்புகள் அமைத்ததால் நகரங்கள் உருவாகின. இப்படி இடம்பெயர்ந்து வாழ்ந்த காலம் முதலே மரங்களை சார்ந்துதான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் செல்லும் பாதைகள் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு பேணிக்காத்து வளர்க்க ஆரம்பித்தனர்.

இதைத்தான் அசோகர், ராணி மங்கம்மாள் போன்றோர் செய்தார்கள். ஆக, சாலையோரங்களில் மரங்களை நடுவதும், அதன் நிழலில் படைகளும், பாதசாரிகளும் ஓய்வெடுப்பது மன்னர் காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் நிகழ்வாகும். தற்போது சாலைகளில் இருக்கும் பெரும்பான்மையான மரங்கள் அழிந்துவிட்ட நிலையில், அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டிய பெரும் கடமை நம் முன்னே சவாலாக நிற்கிறது. நம்மில் பலர் மரம் வளர்க்க முன்வருவதில்லை. ஆனால், 100 மரக்கன்றுகளை நட்டு அதை முறையாக பராமரித்து வருபவர்தான் மதுரை மாவட்டம் வாழவந்தான்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவர் மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் பை–பாஸ் ரோட்டின் ஓரமாக தென்கால் கண்மாய் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்களை வைத்துள்ளார். அம்மரங்கள் அவருக்கு மேல், காற்றில் அசைந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

அந்தமரக்கன்றுகள் காற்றில் அங்கும் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு மரக்கன்றுக்கும் பக்கவாட்டில் மூங்கில் கம்புகள் ஊன்றியுள்ளார். இரண்டு நாளைக்கு ஒரு முறை தனி ஒரு மனிதனாக குடங்களில் தண்ணீர் எடுத்து அதை 100 மரக்கன்றுகளுக்கு ஊற்றி தன் பிள்ளையை போலவே வளர்த்து வருகிறார். அவைகளை பராமரிப்பதே அவருடைய பிரதான வேலையாக இருக்கிறது. மரங்கள் வளர்ப்புக்கு அவருக்கு அரசு தரப்பில் எந்தஒரு உதவியும் கிடையாது.

3 மகள்களையும் திருமணம் செய்து வைத்து விட்டு, மனைவியில்லாத வாழவந்தான், திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையின் முன்பு இரவு நேரங்களில் தூங்கி வருகிறேன் என்று கூறுகிறார். மதிய வேளையில் முருகன் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் உணவாகும். அருப்புக்கோட்டையில் எனது சொந்த வீட்டில் காலி இடங்களில் பூச்செடிகள் காய்கனி செடிகள் பராமரித்துள்ளேன். அதனை அடிப்படையாக கொண்டுதான் மரங்களை வளர்க்கிறேன். இப்போது, மரக்கன்றுகள் தளிர் விட்டு வளருவதை பார்த்து மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது பூரிப்புடன் கூறுகிறார்.

என்னுடைய பணியை பார்த்து வழிப்போக்கர்கள் சிலர் தானாக முன்வந்து குடம், மண்வெட்டி, கடப்பாரை தந்து உதவியுள்ளனர். ஒருவேளைக்கு கோவிலில் கிடைக்கும் அன்னதானம் போதும், இரவில் உறங்க பெட்டிக்கடை போதும், இப்போது 100 மரக்கன்றுகளையும் பராமரித்து வளர்ப்பதுதான் என்னுடைய உயிர்மூச்சான பணியாகும் எனக் கூறியுள்ளார். அவருடைய பணி சிறக்க அனைவரும் வாழ்த்துவோம். அவ்வழியாக செல்லும் போது முடிந்த உதவியை செய்வோம்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %