இந்திய அரசியல் வரைப்படத்தில் காவி (பா.ஜனதா) நிறம் மறைந்து வருகிறது. ஜார்கண்ட மாநில தேர்தல் முடிவுகள் பா. ஜனதாவிற்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மார்ச் 2018-ல் பா.ஜனதா நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சொந்தமாக ஆட்சியில் இருந்தது, அதே நேரத்தில் மற்ற ஆறு மாநிலங்களை மற்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஜார்கண்ட் தேர்தலில் தோல்வியை அடுத்து பா.ஜனதா இப்போது எட்டு மாநிலங்களில் மட்டுமே சொந்தமாக ஆட்சி செய்கிறது, அதேசமயம் அதே அளவு மாநிலங்களில் (8 மாநிலங்களில்) கூட்டணி ஆட்சியில் உள்ளது.
பெரிய இழப்பாக பரப்பளவில் பா.ஜனதா ஆட்சியதிகாரத்தில் இருக்கும் இடங்களும் குறைந்துள்ளது. 2018 மார்ச் மாதம் சொந்தமாக அல்லது பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை தன்னுடைய ஆட்சியின் கீழ் பா.ஜனதா வைத்திருந்தது. இது, தற்போது 34 சதவீதமாக குறைந்துள்ளது.
அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்பட்ட இழப்புகளுடன் கடந்த ஆண்டு பா.ஜனதா கீழ்நோக்கி செல்ல தொடங்கியது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், சத்தீஸ்கரில் கட்சி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 2018 டிசம்பரில் காங்கிரஸிடம் அதிகாரத்தை இழப்பதற்கு முன்பாக பா.ஜனதா மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அக்டோபரில் மராட்டியத்தில் பா.ஜனதா தனது அதிகாரத்தை இழந்தது, அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டாளியான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கூட்டணியை முறித்துக் கொண்டது. அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்ற அரியானாவில்கூட, பா.ஜனதா பெரும்பான்மையை பெறவில்லை. மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு துஷ்யந்த் சவுதாலாவை பா.ஜனதா நாடவேண்டியது இருந்தது.
மார்ச் 2018-ல் ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக பா.ஜனதா இருந்தது. பின்னர் ஆட்சியிலிருந்த மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவை பா.ஜனதா வாபஸ் பெற்றதையடுத்து, மாநிலம் ஜனாதிபதிகள் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு ஆகஸ்டில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் ஜம்மு காஷ்மீர் மட்டுமே சட்டசபையை கொண்ட மாநிலமாகும், அங்கு இன்னும் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.