தமிழகத்தில் போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரியில் ரூ.900 கோடி மோசடி…!

Read Time:2 Minute, 16 Second

தமிழகத்தில் போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரியில் ரூ. 900 கோடி வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிவந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) வரிச் சலுகை பெறுவதற்காக போலி நிறுவனங்கள் உருவாக்கி, அதன் பெயரில் பில்கள் தயாரித்து மோசடிகள் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 19, 20 தேதிகளில் சோதனை நடத்தினர் என்று ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பலரது அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை போன்றவற்றை பயன்படுத்தி, பல்வேறு பெயர்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ரூ.900 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி நடந்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


போலி நிறுவனங்கள் மூலமாக, ரூ.152 கோடி உள்ளீட்டு வரிச் சலுகை பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோசடி செய்ததற்காக கமிஷனாக பெறப்பட்ட ரூ.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட ஆதார், பான் உட்பட பல்வேறு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


சோதனையின் போது பெரும்பாலும் திண்டிவனம், விழுப்புரம் பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்களின் அடையாள அட்டைகளே இருந்தன. அரசு திட்டங்களில் கடன் உதவி பெற்று தருவதாக கூறி, அவர்களது அடையாள அட்டைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.