புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்ததும்… மாணவி ரபீகா அப்துரகீம் விளக்கமும்…

Read Time:6 Minute, 52 Second
Page Visited: 33
புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்ததும்… மாணவி ரபீகா அப்துரகீம் விளக்கமும்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக்கொண்ட புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவியை போலீசார் ஹிஜாப்பை அகற்றும்படி கூறியதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டதை நிராகரித்துள்ள மாணவி ரபீகா அப்துரகீம், போலீசார் என்னுடைய ஹிஜாப்பை அகற்றும்படி கேட்டதாக கூறும் செய்திகள் பொய்யானது என்று தன்னுடைய பேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவ, மாணவிகள் போராடிவரும் காரணத்தினால் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. விழாவில் கேரளாவை சேர்ந்த மாஸ் கம்யூனிகேசன் முதுகலை பட்டப் படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றவர் மாணவி ரபீக்கா அப்துரகீம் தன்னுடைய சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வாங்கிவிருந்தார். ஆனால், அவரை காவல்துறையினர் விழா அரங்கைவிட்டு வெளியே அழைத்து வந்துவிட்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழா முடிந்து வெளியே வந்ததும்தான் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதனால் மனம் உடைந்த மாணவி தனக்கான தங்க பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார்.

ஜனாதிபதி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டதும், இதை அவமரியாதையாக கருதி தங்கப்பதக்கத்தை பெற மாணவி மறுத்ததும் புதுவை பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாணவி ரபீக்கா அப்துரகீமிடம் பேசியதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இன்று பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி வருகைக்கு சற்று முன்னர் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் பேசவேண்டும் என்று கூறி பட்டமளிப்பு அரங்குக்கு வெளியே அழைத்தனர். பின்னர் என்னை கொஞ்சம் காத்திருக்க சொல்லிவிட்டு அவர்கள் அரங்கின் கதவுகளை அடைத்துவிட்டனர். அதன் பிறகு ஜனாதிபதி அரங்கைவிட்டு சென்ற பின்னரே என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர். என்னை என்ன காரணத்திற்காக வெளியே அழைத்தனர் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் இது எனக்கு இந்த நாளில் ஒரு தைரியத்தை கொடுத்தது, இருந்தாலும் எந்த பாகுபாட்டின் அடிப்படையில் என்னை வெளியேற்றினர் என்பது எனக்கு புரியவில்லை. அதனால் இதை எதிர்த்தும் மேலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்தும், உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தான் நான் இந்த தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தேன் என தெரிவித்தார் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையே மீடியாக்களில் மாணவி ரபீக்கா அப்துரகீம் தலையில் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றும்படி காவல்துறை கேட்டதாக தகவல்கள் பரவியது. இது தவறான செய்தியென்று மாணவி விளக்கம் அளித்துள்ளார்.

மாணவி ரபீக்கா இதுதொடர்பாக தன்னுடைய பேஸ்புக் பகுதியில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எனது தங்கப் பதக்கம் மற்றும் முதுநிலை சான்றிதழையும் பெறும் தருணத்தை பற்றி நான் அடிக்கடி கனவு கண்டு வந்தேன். இந்தியா முழுவதும் ஒரு வலுவான அமைதியான செய்தியை அனுப்பக்கூடிய வகையில் இது முடிவடையும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தவில்லை. ஒரு பெண்ணாக, ஒரு மாணவராக, ஒரு இந்தியனாக, இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக போராடும் அனைத்து மாணவர்கள் மற்றும் இந்தியாவின் பொதுமக்களுக்கு ஆதரவாக எனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை நிராகரித்தேன்.

கல்வி என்பது இளைஞர்களுக்கு என்ன அர்த்தம் என்பதை உலகுக்கு காண்பிக்கும் வழியாகும். கல்வி என்பது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் கிடையாது. ஒற்றுமை, அமைதி மற்றும் அநீதி, பாசிசம் மற்றும் மதவெறிக்கு எதிராக எழுந்து நிற்பது போன்ற செய்திகளைக் கற்றுக்கொள்வது ஆகும். அறியப்படாத காரணங்களுக்காக நான் ஆடிட்டோரியத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி வந்தபோது 100 மாணவர்கள் தங்கள் பதக்கங்களுக்காக காத்திருந்தனர். அவர் வெளியேறும்போது மட்டுமே நான் அனுமதிக்கப்பட்டேன். ஒரு படித்த இளைஞனாக என்னால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது என்பதற்காக நான் நிம்மதியாக உணர்கிறேன். போலீசார் எனது ஹிஜாப்பை அகற்றும்படி கேட்டதாக கூறும் செய்திகளை நான் பார்த்து வருகிறேன். அது தவறானது. யாரும் என்னை எதையும் அகற்ற சொல்லவில்லை. அது தவறானது. என்னை ஏன் வெளியே இருக்க சொன்னார்கள் என்று யாரும் என்னிடம் கூறவில்லை என்று கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %